சட்டத்தரணி மற்றும் ஈஸ்டர் குண்டுதாரிகள் இருவரால் நடத்திச் செல்லப்பட்ட மதரஸாக்கள் கண்டுபிடிப்பு

0

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி மற்றும் குண்டுதாரிகள் இருவரால் நடத்திச் செல்லப்பட்ட 2 மதரஸாக்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனின் சகோதரர் ரியாஜ் பதியுத்தீன் மற்றும் சட்டத்தரணியொருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், குறித்த சட்டத்தரணியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, தற்கொலை குண்டுதாரிகள் இருவருடன் இணைந்து அவர் நடத்தி வந்த 2 மதரஸாக்கள், குற்றத்தடுப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த மத்ரஸாக்களை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று நடத்தி சென்றுள்ளதுடன், குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவராக கைது செய்யப்பட்ட சட்டத்தரணியே செயல்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

புத்தளம் மதுரங்குளி பகுதியிலும், புத்தளம் வனாத்துவில்லு பகுதியிலும் இவை அமைந்துள்ளன என்றும் கடந்த வாரம் குற்றத்தடுப்புப் பிரிவினர் குறித்த மதரஸாக்களுக்கு சென்று ஆய்வுகளை நடத்தியுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரங்குளியில் உள்ள மதரஸாவின் காணியின் ஒரு முனையில், சர்வதேச பாடசாலை ஒன்றும் நடத்தப்பட்டு வருவதுடன் இந்த சர்வதேச பாடசாலை மற்றும் காணி தொடர்பிலும் தற்போது விசாரனைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றைய மதரஸா 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதன் வாயிலில் ஒரு பள்ளியும் அமையப் பெற்றுள்ளதாகவும், அநாதைப் பிள்ளைகளுக்காகவே இந்த மதரஸா நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதாக குறித்த விசாரனைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.