சமூகத்தில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் – அனில் ஜாசிங்க எச்சரிக்கை

0

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தொடர்ச்சியாக தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்படுகின்றமையை வைரஸ் பரவல் அலையாக கருத முடியாது. இதனை கொத்தணி பரவல் என்று கூறலாம்.

வேறு கொத்தணி பரவல் ஏற்பட்ட போது அவற்றைக் கட்டுப்படுத்தியதைப் போன்று இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து தொடர்ந்தும் விளக்கமளித்த அவர் ,

புனர்வாழ்வு நிலையங்களிலுள்ளவர்கள் வெளியிடங்களுக்குச் செல்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை. இங்குள்ள ஊழியர்கள் ஆலோசகர்கள் உள்ளிட்ட ஏனைய அதிகாரிகள் மீள அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இராஜாங்கனை , அபராதுவ மற்றும் வெலிகந்த ஆகிய பிரதேசங்களே தற்போது பிரச்சினைக்குறிய பிரதேசங்களாகக் காணப்படுகின்றன. இந்த பிரதேசங்களில் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் கடந்த காலங்களில் போக்குவரத்துக்கள் அதிகமாகக் காணப்படுகின்றமையால் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும். எனவே குறித்த அதிகாரிகள் சென்ற இடங்கள் அவர்கள் தொடர்புகளைப் பேணிய நபர்களை இனங்காணும் செயற்பாடுகள் சுகாதாரத்துறை , புலனாய்வுப்பிரிவு மற்றும் பாதுகாப்புபிரிவினரால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் மேலும் பல நோயாளர்கள் இனங்காணப்படக் கூடும். தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளைப் பேணிய பெருமளவானவர்களை இணங்கண்டுள்ளோம் என்று நம்புகின்றோம்.

இராஜாங்கனையில் இனங்காணப்பட்ட ஆலோசகருடன் தொடர்புகளைப் பேணியதால் தொற்றுக்குள்ளான 14 பேர் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளனர். எனினும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.

இராஜாங்கனை தொற்றாளர் கலந்து கொண்ட மரண வீடு மற்றும் மத சடங்கு இடம்பெற்ற வீடு என்பன சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை மீறியே நடைபெற்றுள்ளது. எனவே தான் இவ்வாறு அதிளவான மக்களை ஒன்று திரட்ட வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

தற்போது ஒரு வார காலத்திற்கு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமை பாதுகாப்பிற்காகவேயாகும். சுகாதாரத்துறையும் கல்வி அமைச்சும் இவ்வாறான தீர்மானங்களை எடுப்பதற்கு தள்ளப்படுகின்றமை ஒரு சிலரது அசமந்த போக்கின் காரணமாகவேயாகும். மக்கள் தமது வாழ்வாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் மாத்திரமே நாடு முழுமையாக திறக்கப்பட்டது. வேறு எதற்காகவும் அல்ல.

தேர்தல் பிரசார கூட்டங்களின் போது பின்பற்றப்பட வேண்டிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் வெளியிடப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ளது. அவற்றை உரிய தரப்பினரே பின்பற்ற வேண்டும். அதனை வர்த்தமானிப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.