சர்ச்சையை ஏற்படுத்திய பிரியங்க பெர்னாண்டோ மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு!

0

பிரித்தானியாவில் தமிழ் மக்களின் கழுத்தறுப்பேன் என சைகை காண்பித்த இராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோவிற்கு மேஜர் ஜெனரல் என்ற பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு மேஜர் ஜெனரல் என்ற பதவி உயர்வு வழங்கப்பட்டதனை இராணுவ ஊடக பிரிவும் உறுதிப்படுத்தியுள்ளது.

அத்தோடு 5 பேர் மேஜர் ஜெனரல்களாகவும், 4 பேர் பிரிகேடியர்களாகவும், 39 பேர் லெப்டினன்ட் கேணல்களாகவும், 60 பேர் மேஜர்களாகவும் மற்றும் 60 பேர் லெப்டினன்ட்களாகவும் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று, பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் இராணுவ சீருடையில் கடமையில் இருந்த பிரியங்க பெர்னாண்டோ, தூதரகத்திற்கு வெளியில் வந்து தனது கழுத்தை வெட்டுவதை போல விரல்களால் சைகை காண்பித்திருந்தார்.

குறித்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது இருப்பினும், இலங்கை அரசாங்கம் பிரிகேடியரைப் பாதுகாத்தது, பின்னர் அவர் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.

இருப்பினும் அவர் கழுத்தை அறுத்து சைகை காண்பித்தார் என நீதிபதி அறிவித்ததுடன் பிரித்தானிய நீதிமன்றத்தில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட்டிருந்தது.

இதனை தொடர்ந்து பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ, இராணுவத் தலைமையகத்தில் காணி, சொத்துக்கள் மற்றும் படையினரின் குடியிருப்புகள் சபையின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.