சர்வாதிகாரியாக செயற்பட வேண்டாம் – ஜனாதிபதியிடம் கோரிக்கை!

0

கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் சர்வாதிகாரியாக செயற்பட வேண்டாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்த சூழ்நிலையை ஜனநாயக ரீதியாக கையாள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதே சிறந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் சிறந்த மருத்துவர்கள் மற்றும் திறமையான சுகாதாரப் பணியாளர்கள் உள்ளனர் என்றாலும் சோதனை நடத்துவதற்கான வளங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கொரோனா வைரஸிலிருந்து நாடு விடுபடும்வரை ஒரு தேர்தல் தேவையில்லை என்றும் அவர் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார். அத்தோடு அரசியலமைப்பை மதிக்க வேண்டும் என்றும் கருத்து வேறுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் கோரிக்கை விடுத்தார்.

ஏப்ரல் மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாட்டில் இருந்து நீக்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தவறான உறுதிமொழி வழங்கியமைக்காக சுகாதார அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

தவறான உறுதிமொழியை வழங்கியதற்காக சுகாதார அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும், அல்லது அவரது தவறான தகவல்களை வழங்கியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.