சர்வாதிகார நிர்வாகக் கட்டமைப்புக்குள் நுழையும் அரசாங்கம்- சுமந்திரன் கடும் காட்டம்!

0

நாட்டில் ஜனநாயக விழுமியங்களை மீறி, சர்வாதிகார நிர்வாக கட்டமைப்புக்குள் நுழையும் வகையிலேயே அரசாங்கத்தின் தீர்மானங்கள் காணப்படுகின்றன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறாக கட்டமைப்பு இல்லையென்றால் இந்த தேசிய நெருக்கடியான நிலைமையில் நாடாளுமன்றத்தைக் கூட்டாமல் இருப்பதற்கான காரணம் என்ன என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்த அவர், “நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டால் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறது.

நெருக்கடியான நிலைமை ஏற்படும்போதும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை ஜனாதிபதியால் கூட்ட முடியும். அத்தோடு இந்தச் சந்தர்ப்பத்தில் முக்கியமான விடயம் தேர்தலை நடத்த முடியாது என்பதாகும்.

அரசியலமைப்பின் படி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாத காலத்திற்குள் புதிய நாடாளுமன்றம் கூட வேண்டும். அதற்கமையவே மார்ச் மாதம் 2ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட தினத்திலிருந்து எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதிக்குள் புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும் இந்தப் பொறுப்பினை அரசாங்கம் தேர்தல்கள் ஆணைக்குழு மீது சுமத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த குறிப்பிட்ட காலப்பகுதிக்கு இடையில் நாட்டில் ஏதேனும் நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டால் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்று ஜனாதிபதியால் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும். காரணம் இவ்வாறான சந்தர்ப்பத்தில் தேர்தலை நடத்துவது ஆபத்தானது என்பது அனைவரும் அறிந்ததொன்றாகும்.

ஆனால், மூன்று மாதங்களுக்கும் அதிகமாக நாடாளுமன்றம் செயற்படாமலிருக்கவும் முடியாது. ஜனநாயக நாட்டில் நாடாளுமன்றமே முக்கியமானதாகும். எனவேதான் வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்று நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு ஏற்கனவே நாம் வலியுறுத்தியிருந்தோம். அதன்பின்னர் பொது சுகாதார நிலைப்பாட்டினைப் பெற்று மீண்டும் தேர்தலை நடத்துவதற்கான தினத்தை தீர்மானிக்க முடியும்.

எனினும் நாடாளுமன்றம் இன்றி தனது சர்வாதிகார ஆட்சியையே ஜனாதிபதி முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார். ஜனநாயக நாடொன்றில் நாடாளுமன்றம் இன்றிய ஆட்சியை அனுமதிக்க முடியாது. நாடாளுமன்றமே ஜனநாயகத்திற்கு அத்தியாவசியமானதாகும்.

இதேவேளை, கொரோனா வைரஸ் ஒழிப்பிற்காக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பல்வேறு வகையில் நிதி கிடைக்கப் பெறுகிறது. அவ்வாறு கிடைக்கப் பெறுவது பொது நிதியாகும். பொது நிதியை முகாமைத்துவம் செய்வதற்கு நாடாளுமன்றமே அனுமதியளிக்க வேண்டும். ஆனால் தற்போது நாடாளுமன்றம் இல்லை என்பதால் பொது நிதி முகாமைத்துவம் துஷ்பிரயோகப்படுத்தப்படுகிறது.

பொது நிதி சட்டத்தை மீறி அதனைப் பயன்படுத்துகின்றனர். அத்தோடு நாடாளுமன்றத்தை மழுங்கடிக்கும் வகையிலே அரசாங்கம் செயற்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்