சவாலுக்கு முகங்கொடுக்க புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் – ரணில் ஆலோசனை!

0

நாட்டை கொரோனாவிலிருந்து காத்துக் கொள்ளும் வகையிலான 13 யோசணைகளை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.

விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டு அவர் இந்த யோசணைகளை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடந்த சில தினங்களாக நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவல் பல நாடுகளிலும் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது.

வைரஸ் பரவியுள்ள நாடுகள் அனைத்திலும் ஒட்டுமொத்தமாக சுமார் 5 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு ஐரோப்பாவில் மையம் கொண்டிருந்த வைரஸ் பரவல் தற்போது அமெரிக்காவையும் பாரியளவில் தாக்க ஆரம்பித்துவிட்டது.

இதனால் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் மரணங்கள் 8 ஆயிரத்தை அண்மித்துள்ளன.

எனினும் ஜேர்மன் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜேர்மனில் பாதிக்கப்பட்ட சுமார் 43 ஆயிரம் பேரில் 267 மரணங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளன. வியாழக்கிழமை ஐக்கிய இராச்சியத்தில் ஒவ்வொரு 13 நிமிடத்துக்கும் ஒரு மரணம் பதிவாகியது.

இந்தியாவில் பாதிக்கப்பட்ட 700 பேரில் 20 மரணங்கள் பதிவாகியிருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவின் நிலைவரம் தொடர்பில் நாம் விசேட கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

இந்தியா இலங்கைக்கு அயல் நாடு என்பதால் இவ்விரு நாடுகளுக்கிடையிலான அந்நியோன்யம் பாதிக்கப்படலாம்.

இதை நாம் இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கணிப்பின் படி இலங்கையில் சுமார் 500 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் சமூகத்தில் 19 ஆயிரம் பேருடன் தொடர்புகளைப் பேணியிருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவ்வாறானவர்கனை உடனடியாக இனங்கண்டு ஏனையோரைப் போன்று உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது அத்தியாவசியமாகும்.

அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில்  அனைவரும் இணக்கம் தெரிவித்தமைக்கமைய சமூக இடைவெளியைப் பேணுவதன் முக்கியத்துவம் இதுவேயாகும்.

சுகாதார அமைச்சினால் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை இந்த வைரஸ் பரவல் அதிகரிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாமனைவரும் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

இதன் காரணமாக என்னால் முன்வைக்கப்படும் கீழ்வரும் யோசனைகள் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கோருகின்றேன்.

ஊடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரச மற்றும் தனியார் சுகாதார சேவைகளை ஒன்றிணைத்து செயற்படும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் ஒருங்கிணைப்பின் கீழ் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கின்றேன். இதன் மூலம் கூடியளவு சுகாதார சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

தனியார் வைத்தியசாலைகளில் இலவசமாக பரிசோதனைகளை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு அதற்கான கட்டணத்தை அரசாங்கத்தின் மூலம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இது தொடர்பில் பொதுவானதொரு வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக உடனடியாக உரிய தரப்பினருடன் கலந்துரையாட வேண்டும்.

மருத்துவ பரிசோதனைகளுக்காக உகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு அரச மற்றும் தனியார் சுகாதாரத் துறைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

முகக்கவசம் மற்றும் வென்டிலேட்டர்ஸ் என்பவற்றை கொள்வனவு செய்தல் மற்றும் இலங்கையில் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.

வைத்தியசாலைகளில் கட்டடில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தல்.

ஓலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளதால் அதற்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள் ஜப்பானில் உள்ளன.

அவற்றில் குறிப்பிட்டளவை இந்த சந்தர்ப்பத்தில் எமக்கு பெற்றுக் கொள்ள முடியுமா என்பது தொடர்பில் ஆராய வேண்டும். நான் இது தொடர்பில் இலங்கையிலுள்ள ஜப்பான் தூதுவரிடம் கலந்தாலோசித்திருக்கிறேன்.

இந்திய மற்றும் இலங்கை பிரஜைகள் கடற்பிரதேசத்தில் மீன் பிடி நடவடிக்கைளில் ஈடுபடும் போது நெருங்கிச் செயற்படுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி ஆராயப்பட வேண்டும்.

சிங்களம் – தமிழ் புத்தாண்டு, உயிர்த்த ஞாயிறு மற்றும் ரமழான் பண்டிகை தொடர்பாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள பாதுகாப்பான வேலைத்திட்டங்கள் தொடர்பில் முன்கூட்டியே பொது மக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்பவையே  என்னால் அரசாங்கத்திடம் முன்வைக்கப்படும் யோசனையாகும்.

இதேபோன்று பிரிதொரு காரணம் பற்றியும் அவதானம் செலுத்த விரும்புகின்றேன்.

நாடளாவிய ரீதியில் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து என்பவற்றை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் சில பிரதேசங்களில் தற்போதும் அந்த வேலைத்திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

எனவே இந்த வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த வேலைத்திட்டத்தில் பல்பொருள் அங்காடிகள் மாத்திரமின்றி சிறு விற்பனை நிலையங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன்.

அதேவேளை ஊபர், பிக்மீ போன்ற சேவைகளையும் இணைத்துக் கொண்டால் நாட்டிலுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான ஒரு நிவாரணமாக அமையும்.

எமது நாடு  அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் சுகாதார சேவை, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுடன் தொடர்புடையோர் மிகுந்த அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் தமது கடமைகளை நிறைவேற்றுகின்றனர்.

அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதன் மூலம் எம்மால் திருப்தியடைய முடியாது. அவர்களுடைய சுகாதார நலன்களுக்கு பாதுகாப்பை வழங்கக் கூடிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

இந்த துறையினர் பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்தால் நாடு மிகவும் பாரதூரத்தன்மைக்கு முகங்கொடுக்கும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த சவாலுக்கு முகங்கொடுப்பதற்காக ஏனைய நாடுகளில் விசேட சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதே போன்று இலங்கையிலும் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே எனது யோசனையாகும்.

இதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஐக்கிய தேசிய கட்சி எவ்வித நிபந்தனையும் இன்றி ஒத்துழைக்க தயாராக இருக்கிறது.

அதேபோன்று பெரும்பாலான இலங்கையர்கள் இத்தாலி, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகளில் பணி புரிகின்றனர். இன்றும் அவர்கள் அந்நாட்டிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தற்போது தாய் நாட்டுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.

அவ்வாறான இலங்கையர்கள் வாழ்கின்ற நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். அங்குள்ள இலங்கையர்களின் தகவல்களைத் திரட்டி அவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு பிரச்சினைககள் காணப்படுமாயின் அவற்றை அறிக்கைப்படுத்த வேண்டும்.

இது மிக இலகுவாக முன்னெடுக்கப்படக் கூடிய விடயமாகும். எனவே வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்கள் இதனைப் பொறுப்பேற்கும் என்று நம்புவதோடு, இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.