சஹ்ரான் ஹஷீமிற்கு நெருங்கிய ஒருவர் இந்திய புலனாய்வுப் பிரிவிற்கு தகவல்

0

ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹஷீமிற்கு நெருங்கிய ஒருவர் இந்திய புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் வழங்கியுள்ளதாக, தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று இரவு வௌிக்கொணரப்பட்டுள்ளது.

அரச புலனாய்வுப் பிரிவின் அதிகாரியொருவர் 22ஆம் திகதி ஆணைக்குழு முன்பாக சாட்சி வழங்கும் போதே இந்த விடயம் வௌியானது.

தற்போது இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படும் புலஸ்தினி அல்லது சாரா என்ற பெண் மூலமாகவே இந்திய புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டிருக்கலாம் என அரச புலனாய்வுப் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.

அவர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படும் தகவல்கள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு முன்னிலையில் நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது.

சாய்ந்தமருதில் வீடொன்றில் குண்டொன்றை வெடிக்க வைத்து உயிரிழந்த முஹம்மத் ஹஸ்துன் என்பவரின் மனைவியாகவே சாரா கருதப்படுகிறார்.