சாணக்கியனின் மக்கள் நலம் சார்ந்த கோரிக்கைக்கு நம்பிக்கையோடு இருங்கள் என்று உறுதியளித்தார் அமைச்சர் டக்ளஸ்!

0

கேள்விகளுக்கான பதிலோடு செயற்பாடுகளும் இருக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் வாய்மொழி மூலமான கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நீங்கள் அனைத்து விடயங்களையும் செய்ய முடியும் என கூறுகின்றீர்கள். ஆனால் உங்களுடைய வரவு செலவுத்திட்டத்தில் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை முழுமையாக பயன்படுத்தினாலும் கூட இந்த அனைத்து விடங்களுக்கும் செய்யும் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்காது.

அதேபோன்று பால்சேனை என்ற பிரதேசத்தில் வாகரையில் அந்த இடத்திலும் கூட ஒரு மீனவத்துறை முகத்திற்கான சில முன்னேற்பாடுகள் நடந்துள்ளன. அது தொடர்பாகவும் நாங்கள் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏன் என்றால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 130 கிலோ மீற்றர் கரையோரப்பிரதேசம் உள்ளது.

அதில் சுமார் 15 ஆயிரம் மீனவர்கள் கடற்தொழில் நடவடிக்கையில ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 375 ரோலர் படகுகள் உள்ளன. வாழைச்சேனை துறைமுகம் ஊடாகவே அவை கடற்தொழில் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

15 பேருக்கு 375 ரோலர் படகுகளே உள்ளன. இதிலேயும் ஆயிரம் சிறிய ரக படகுகளே உள்ளன. எனவே கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் சுமார் 15 ஆயிரம் மீனவர்களின் குடும்பங்களுக்கு உங்களுடைய அமைச்சின் ஊடாக இந்த வருடத்திற்குள் நிதி ஒதுக்கீடு செய்ய கூடிய வழிமுறைகள் உள்ளனவா? இது நடைபெறக்கூடிய சாத்தியக்கூறு உள்ளதா?

ஏன் என்றால் கோட்டை கல்லாறினை எடுத்துக் கொண்டால், பால்சேனையினை எடுத்துக் கொண்டாலும் சரி புன்னகுடாவினை எடுத்துக் கொண்டாலும் சரி இதற்கு முதல் நான் கேட்ட கேள்வி அதாவது ஐஸ் தொழிற்சாலையாக இருந்தாலும் சரி இந்த அனைத்து விடயங்களுக்கும் நீங்கள் செய்ய முடியும் என்ற விடயத்தினை நீங்கள் இந்த இடத்தில் அழகாக கூறியுள்ளீர்கள்.

ஆனால் இவை அனைத்தையும் செய்வதற்கான நிதி இந்த அரசாங்கம் உங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளதா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நான் செய்வதை சொல்பவன், சொல்வதை செய்பவன் என பதிலளித்தார்.

அத்துடன், மேலதிக பணத்தினைப் பெற்றுக்கொண்டாவது இந்த விடயத்தினை செய்து முடிப்போம் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

இதன்போது மீண்டும் கருத்து வெளியிட்ட சாணக்கியன் எம்.பி, நீங்கள் ரஜிகாந்தினை போன்று நான் செய்வதை சொல்வேன், சொல்வதை செய்வேன் என கூறியுள்ளீர்கள். அப்படி நடந்தால் மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டார்.

அத்துடன் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட சாணக்கியன், இந்த மீன்பிடி துறைமுகங்கள் அனைத்தையும் அமைத்தாலும் கூட ரோலர் படகுகளை பெற்றுக்கொள்வதற்காக மீனவர்கள் பாரியளவிலான செலவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டி வரும்.

அரசாங்க வங்கிளின் ஊடாக 6 சதவீத வட்டிக்கு கடன் வழங்கப்படுவதாக ஒரு திட்டமும், அரசாங்கத்தினால் 50 வீதத்தினை வழங்கும் ஒரு திட்டம் இருப்பதாகவும் நாங்கள் அறிகின்றோம்.

ஆனால் அதனையும் விட நான்கு, ஐந்து மீனவர்களை சேர்த்து வங்கியில் சென்று 1 கோடி ரூாய்க்கும் கடனினை பெற்றுக்கொள்வதற்காக அவர்களுக்கு செக்யூரிகளை வழங்குவதற்கான எந்த வசதிகளும் இல்லை.

நேரடியாக மீனவர்களை விடவும் ஒரு சில முதலாளிகளே இதனால் இலாபம் அடைகின்றனர். இதற்கு ஐந்து, ஆறு அல்லது ஒரு 10மீனவர்களை ஒன்றாக இணைத்து அவர்களுக்கு  அரசாங்கத்தினால் அந்த கிராண்டினையும் வழங்கி, கடன் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து ஏதாவது செய்ய கூடிய திட்டங்கள் உள்ளனவா? ஏன் என்றால் நீங்கள் இந்த துறைமுகங்களை அமைத்தாலும், மீனவர்களுக்கு அந்த இலாபம் செல்லாது.

அதனையும் விட மிக முக்கியமானது நீங்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தினையும், அந்த கட்டடத்தினையும் புனரமைப்பு செய்யவுள்ளதாக தெரிவித்தீர்கள்.

ஆனால் அதனையும் விட மிக முக்கியமான தேவை ஒன்று உள்ளது. பாலம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். புன்னக்குடாவிலிருந்து களுவங்கேணிக்கு பாலம் ஒன்றினை அமைக்க வேண்டும் அங்கிருந்து இங்கே வருகை தருவதற்காக.

தற்போது இந்த மாரி காலத்தில் சுமார் 22 கிலோ மீற்றர்கள் சுற்றி நடந்து வருகின்றார்கள். எனவே அந்த பாலத்தினை அமைத்தால் ஒரு கிலோ மீற்றர் துாரம் கூட நடக்க வேண்டிய தேவை ஏற்படாது. எனவே நான் தற்போது உங்களிடம் கேட்டுள்ள இரண்டு கேள்விகளுக்கும் ஒரு நல்ல பதிலுடன் சேர்த்து செயல்பாடுகளும் இருக்கும் என நம்புகின்றேன்“ எனக் குறிப்பிட்டிருந்தார்.