சாத்திரம் சொல்பவரைப்போல் மண் கொள்ளையினை கண்டுபிடித்து சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது- இரா.சாணக்கியன்

0

சாத்திரம் சொல்பவரைப்போல் மண் கொள்ளையினை எல்லாம் கண்டுபிடித்து சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு- ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி, சந்தனமடு ஆற்றுப்பகுதியில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மண் அகழ்வு குறித்து அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இப்பகுதி மக்கள் தனியார் ஒப்பந்தகாரர் மீதே விரல் நீட்டுகின்றனர்.

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் வீதி புனரமைப்பு என்ற போர்வையியல் சட்டவிரோதமாக மண் அகழ்வு இடம்பெறுகின்றது.

குறுகிய காலத்தில் முடிக்க கூடிய வீதி புனரமைப்பினை கூடிய காலத்திற்கு செய்து அதன்மூலம் மண் அகழ்வு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இப்படியான மண் பிரச்சினை ஒன்று உள்ளதை மாவட்ட செயலாளர் மற்றும் அபிவிருத்தி குழு இணைத்தலைவர் ஆகியோர் பார்வையிட்டு, இது தொடர்பாக அப்பகுதி மக்களுக்கு சிறந்ந தீர்வினை வழங்கி அப்பகுதியினை மண் மாபியாக்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.

மேலும், மாவட்ட குழு இணைத்தலைவர் பொலிஸாருக்கு அறிவித்து உடனடியாக மண்மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த நாடாளுமன்ற அமர்வின்போது மாலைதீவிற்கு மண் ஏற்றுமதி செய்யப்படுவதாக நான் கூறியபோது, குறித்த விடயத்தை நிரூபித்தால் பதவி விலகுவேன் என அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் மாலைதீவிற்கு மண் அனுப்பப்படுவதை புவிச்சரிதவியல் பணியகம் தற்போது உறுப்படுத்தியுள்ளது.

ஆகவே, நான் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து சாத்திரம் சொல்பவரைப்போல் இவற்றை எல்லாம் கண்டுபிடித்து சொல்ல வேண்டி உள்ளது.

இங்கிருந்து மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் உடனடியாக இந்த பகுதியை நிரப்பி கொடுப்பதுடன், அழிக்கபப்பட்ட பனம் கன்றுகளை நடுவதற்கான ஏற்பாடுகள் உடனடியாக செய்ய வேண்டும். இல்லாவிடின் மக்கள் வீதிக்கு இறங்க வேண்டிய நிலை ஏற்படும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.