சாஹிட் என பதிவு செய்து வைத்தியசாலையில் அனுமதியான சஹ்ரானின் சகோதரன்

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான சஹ்ரான் ஹாசிமின் சகோதரர் ரில்வான் ஹாசீம், 2018 ஆம் ஆண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சம்பவம் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரியவந்தது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் டொக்டர் எச்.கே.சந்தன ஆணைக்குழுவில் முன்நிலையாகி சாட்சி வழங்கியிருந்தார்.

அவர் தமது சாட்சியத்தில், 2018 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 27 ஆம் திகதி தலை, இடது கண் மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக கூறினார்.

நோயாளியுடன் மேலும் நான்கு பேர் வந்தாக தெரிவித்த அவர், குறித்த நோயாளி எம்.ஐ சாஹிட் என தம்மை பதிவு செய்துள்ளதாகவும் கூறினார் 

அதன்போது ஆணைக்குழு உறுப்பினர்கள், சஹாரானின் சகோதரர் ரில்வான் ஹாசீமின் புகைப்படத்தைக் காட்டி, அந்த நாளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் இவரா? என வினவினர். 

புகைப்படத்தை பார்வையிட்ட வைத்தியர் அது ரில்வான் ஹாசீமின் என்பதை அடையாளம் காட்டினார். 

அதேபோல் மாவனெல்லயில் புத்தர் சிலைகளை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா ஹக்கின் புகைப்படத்தை காண்பித்து இவரை அடையாளம் காட்ட முடியுமா? என கேட்டனர். 

அதற்கு பதிலித்த வைத்தியர் குறித்த நோயாளியை வைத்தியசாலையில் அனுமதித்த நோயாளிக்க பொறுப்பானவர் அவர் என பதிலளித்தார். 

அதேபோல் அன்றைய தினம் கடமையில் இருந்த தாதி ஒருவர் சாட்சியம் அளிக்கையில், வேலைத்தளத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் காயங்கள் ஏற்பட்டதாக காயமடைந்தவர் கூறியாக தெரிவித்தார். 

ஆனால் காயங்களின் தன்மை குறித்து தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். 

குறித்த நோயாளியை வைத்தியசாலை பொலிஸாரிடம் முன்னிலைப்படுத்த முற்பட்ட போது நோளாளியுடன் வருகைத்தந்தவர்கள் கோபமடைந்தாகவும் அப்போதிருந்தே நோயாளி கோபத்துடன் நடந்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.