சிஎப்ஜே என்ற ஊடகவியாளர்களை பாதுகாக்கும் குழு விடுத்துள்ள கோரிக்கை

0

மட்டக்களப்பில் பொலிஸார், ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும், அத்துடன் அவரை குறுக்கீடு இல்லாமல் பணிகளைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சிஎப்ஜே என்ற ஊடகவியாளர்களை பாதுகாக்கும் குழு கோரியுள்ளது. 

ஆகஸ்ட் 23 அன்று, மட்டக்களப்பு பொலிஸின் விசேட குற்றப்பிரிவு அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளராக இருக்கும் ஊடகவியலாளர் சசிகரனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

2020இல் கடலில் மரணமான இந்திய மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை, கடந்த ஜனவரி மாதம் சசிகரன் ஏற்பாடு செய்ததாக அதிகாரிகள் குற்றம் சாட்டி இருந்தனர். 

எனினும் அவர் ஒரு செய்தியாளராக மாத்திரமே அதில் பங்கேற்றார் என்று ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், சிஎப்ஜே மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அதிகாரி கருணநாயக்கவிடம் மின்னஞ்சல் மூலம் வினவியது. சசிகரன் மீது முறையாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதா? என்று அதில் கேட்கப்பட்டது. 

எனினும் பொலிஸ் அதிகாரியால் எந்த பதிலும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், குழுவின் ஆசியத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டீவன் பட்லர், இலங்கையின் பொலிஸார் செய்தியாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் மீதான தொடர்ச்சியான துன்புறுத்தல் விசாரணைகளை நிறுத்தி, அவரது பணிகளுக்குக் குறுக்கீடு இல்லாமல் இருக்கவேண்டும் என்று கேட்டுள்ளார். 

இலங்கையின் தமிழ் சமூகம் அல்லது வேறு எவராலும் நடத்தப்படும் போராட்டங்களை ஊடகவியலாளர்கள் வெளியிடுவதைத் தடுக்க மிரட்டல் உத்திகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் கோரியுள்ளார்.