நான் சிங்கள பௌத்த தலைவன் என்பதை வெளிப்படுத்துவதற்கு ஒருபோதும் தயங்கமாட்டேன் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சுதந்திர சதுக்கத்தில் தற்போது நடைபெற்றுவரும் 73வது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,“ பௌத்த கோட்பாட்டுக்கு அமையவே நான் இந்த நாட்டை ஆட்சி செய்வேன். மேலும் ஏனைய மதங்களுக்கும் இனங்களுக்கும் சமவுரிமை எப்போதும் வழங்கப்படும்.
இதேவேளை ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு சட்டத்தின் ஊடாக நிச்சயம் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.
மேலும், தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளேன்.
அதேபோன்று மத்திய வங்கி முறிகள் மோசடி குற்றச்சாட்டு தொடர்பாகவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.
அந்தவகையில் மீண்டும் இலங்கையில் தீவிரவாதம் தலை தூக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.
இதேவேளை ஊழலை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கொவிட் வைரஸ் குறித்த தடுப்பூசி திட்டம் தொடரும்.
நாட்டின் பொருளாதார மையங்களை வெளிநாட்டினருக்கு விற்கக் கூடாது என்ற கொள்கையை அரசாங்கம் தொடர்ந்து பின்பற்றும்.
அதேவேளையில் இது தொடர்பான வதந்திகளை பரப்புபவர்களின் அடிப்படை நோக்கங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.