சினோபார்ம் தடுப்பூசி பாவனை குறித்து இலங்கையே தீர்மானிக்க வேண்டும் – சீனா!

0

சினோபார்ம் தடுப்பூசி பாவனை குறித்து இலங்கையே தீர்மானிக்க வேண்டும் என சீனா அறிவித்துள்ளது.

மேலும் உள்ளக விவகாரத்தில் தம்மால் தலையீடு செய்ய முடியாது என்றும் இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு ஆறு இலட்சம் சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகளை சீனா வழங்கியிருந்தது.

இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்திலும் வெளியிடங்களிலும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டது.

இதனையடுத்து, இலங்கை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தும் வரையில் சினோபார்ம் இலங்கையர்களுக்கு வழங்கப்படாது என்றும் இலங்கையில் உள்ள சீனப் பிரஜைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இவ்விடயம் குறித்து தெரிவித்துள்ள சீன தூதரகத்தின் ஊடகப்பேச்சாளரும்  அரசியல் பிரிவுத் தலைலவருமான லு சொங், “இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரிலேயே சீன அரசாங்கம்  6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கை அரசாங்கத்திடம் கையளித்தது.

இந்த தடுப்பூசியை யாருக்கு எங்கு எப்படி வழங்க வேண்டும் என்பதை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். அது அந்நாட்டின் உள்ளக விவகாரமாகும். அதில் சீனா ஒருபோதும் தலையிடப்போவதில்லை” என தெரிவித்தார்.