சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தீர்த்தோற்சவம்!

0

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு, மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தீர்த்தோற்சவம் பண்டைய கால முறையின் படி இன்று(புதன்கிழமை) காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கந்த புராண கால வரலாற்றுடன் தொடர்புபட்ட ஆலயமாக மண்டூர் கந்தசுவாமி ஆலயம் விளங்கி வருகின்றது.

சூரபத்மனை சங்காரம் செய்வதற்கு முருகன் ஏவிய வேல், ஆறு பகுதியாகப் பிரிந்து சூரனை வதம் செய்த பின்னர் இலங்கையில் கதிர்காம பகுதியிலும் மண்டூர் பகுதியிலும் இருவேல்களாகத் தங்கியதாக கர்ணபரம்பரை கதைகளில் தெரிவிக்கப்படுகின்றன. அத்துடன் சீர்பாத பரம்பரையுடன் தொடர்புபட்டதாகவும் ஆலய வரலாறுகள் கூறுகின்றன.

கதிர்காமத்தின் வரலாற்றுடன் மட்டுமன்றி இங்கு இடம்பெறும் பூஜை முறைகளும் பண்டைய முறைமையை ஒத்ததாகவே காணப்படுகின்றன.

அதற்கிணங்க கடந்த 14ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமும் பண்டைய தமிழர்களின் நடைமுறைக்கு அமைவாகவே நடைபெற்றது.

21 தினங்கள் நடைபெற்ற ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தினமும் நடைபெற்ற உற்சவமானது சிறப்புமிக்கதாகவே காணப்பட்டது.

தங்கவேல் கொண்டுள்ள பேழை அலங்கரிக்கப்பட்டு அதற்கு தினமும் பூஜைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், ஆலய உள் வீதி வெளி வீதியுலா இடம்பெறவுள்ளதுடன் வள்ளியம்மன் தெய்வானையம்மன் ஆலயங்களுக்கும் பேழை கொண்டுசெல்லப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

இன்று காலை முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று தங்க வேல்தாங்கிய பேழை மட்டக்களப்பு வாவிக்கரைக்கு ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு அங்கு நடைபெற்ற விசேட பூஜையினை தொடர்ந்து தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

தீர்த்தோற்சவத்தினை தொடர்ந்து முருகப்பெருமான் ஆலயத்திற்கு வரும்போது தெய்வானையம்மன் ஆலய வாசலில் சிறுமிகள் ஆரர்த்தி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றதுடன் இதன்போது ஆரத்தியெடுக்கும் சிறுமிகள் மயங்கிவிழும் அதிசயமான, பக்திபூர்வமான நிகழ்வு நடைபெற்றது.