இலங்கை வானொலியின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சின்னையா நடராஜசிவம் காலமானார்.
உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், தனது 74ஆவது வயதில் நேற்று (புதன்கிழமை) இரவு காலமானார்.
இதனையடுத்து, அவரின் பூதவுடல் பொரளையில் உள்ள மலர்சாலையில் வைக்கப்பட்டு, இன்று மதியம் 12 மணியளவில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்று அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
இவரின் மறைவுக்கு ஊடகத் துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பல்லாயிரக்கணக்கான இரசிகர்களைக் கவர்ந்த நடராஜசிவம், சிறந்த அறிவிப்பாளராகவும் ஒலிபரப்பாளராகவும் திகழ்ந்தவராவார்.
அத்தோடு, தமிழ், சிங்கள திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களிலும் கால் பதித்தவராவார்.
இவரின் மறைவு இலங்கையின் ஊடகத்துறையில் பாரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.