சிறுமி ஹிஷாலினி விவகாரம்- மட்டு.மாநகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

0

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதின் வீட்டில் பணிப்புரிந்த சிறுமி ஹிஷாலினி உட்பட  சில சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமைக்கு மட்டக்களப்பு மாநகர சபையில் கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு மாநகர சபையின் 50ஆவது அமர்வு, முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது சிறுமி ஹிஷாலினி உட்பட சில சிறுமிகள்,  ரிசாத் பதியூதின் வீட்டில் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மாநகரசபை உறுப்பினர் வே.தவராஜாவினால் கண்டன தீர்மானமொன்று கொண்டுவரப்பட்டது.

குறித்த கண்டன தீர்மானம், சபையினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

மேலும்  சிறுமியின் மரணத்துக்கு காரணமான அனைவருக்கும் சட்டத்தின் ஊடாக தண்டனை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்க வேண்டும் என வலியுறுத்தும் கடிதமொன்றினை ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பது தொடர்பாக சபையினால் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.