சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் – சாணக்கியன் அரசாங்கத்திடம் கோரிக்கை

0

சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) 15 அம்ச கோரிக்கைகளினை முன்வைத்து பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இன்று வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெக்கப்பட்டது. அரச தாதியர் சங்கம் உட்பட ஆறு சுகாதார அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது.

இந்தநிலையில் இன்று களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் கலந்துகொண்டு ஆதரவினை வழங்கினார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இன்றைய தினம் தங்களது பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளினை முன்வைத்தே பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களின் இந்த கோரிக்கைகளுக்கு அமைய அரசாங்கம், நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சுகாதார ஊழியர்களின் நலனிலும் கவனம் செலுத்த வேண்டும்.

விசேடமாக குறித்த ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் இந்த தடுப்பூசியினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறித்த தடுப்பூசியினை வழங்காவிட்டால் தங்களுடைய பாதுகாப்பினை, தங்களது குடும்பத்தினருடைய பாதுகாப்பினை கூட உறுதி செய்ய முடியாத அபாய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.