கொராரோனா தொற்றிலிருந்து பாதுகாப்புப்பெற சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்தும் முழுமையாக கடைப்பிடித்து பாடசாலை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சினால் சகல பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் தற்போது அனைத்து மாணவர்களுக்கும் திறக்கப்பட்டிருக்கின்றன.
அதனால் சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் வழிகாட்டல்கள் மற்றும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்தும் அவ்வாறே கடைப்பிடித்து வரவேண்டும்.
இதுதொடர்பாக பாடசாலை பொறுப்புதாரிகளுக்கு ஏற்கனவே அறிவித்திருக்கின்றோம்.
என்றாலும் பாடசாலை வளாகத்துக்குள் தொற்று நீக்கல், முகக்கவசம் அணிதல், கைகழுவுதல், சமூக இடைவெளியை பேணுதல் உட்பட கொரோனாவை கட்டுப்படுத்தும் ஆலோசனைகள் தொடர்பில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் உட்பட அனைத்து பாடசாலை சமூகமும் தற்போது கவனக்குறைவாக செயற்படுவதாக ஒருசில பாடசாலைகள் தொடர்பில் எமக்கு தகவல் கிடைத்திருக்கின்றது.
அதனால் குறிப்பாக பாடசாலை போக்குவரத்து சேவை வழங்குதல், சிற்றுண்டிச்சாலைகளை மேற்கொண்டு செல்லுதல் உட்பட பாடசாலை மாணவர்கள் நேரடியாக சமூகத்துடன் ஒன்றுசேரும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சமூகப்பொறுப்பு பாடசாலை பொறுப்பதிகாரிகள் உட்பட பாடசாலை சமூகத்துக்கு இருக்கின்றது.
பிள்ளைகளின் நோய் நிலைமைகளின்போது அதுதொடர்பில் கூடுதல் கவனம்செலுத்தி, அவர்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும்.
மேலும் கொரோனாவின் இரண்டாவது அலை தொடர்பான அச்சுறுத்தல், இதுவரை நாட்டில் இருந்து நீங்கவில்லை. ஒருவேளை, அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் அதனால் அதிகம் பாதிக்கப்படுவது பாடசாலை பிள்ளைகளாகும்.
அதனால் சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிப்பதில் அசமந்தப்போக்கை விட்டு, தொடர்ந்தும் சுகாதார பாதுகாப்பை பேணிவருவதை உறுதிப்படுத்துவது ஒவ்வொரு தனிநபரின் கடமையாக உணர்ந்து மேற்கொள்ளவேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.