சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்களான விசேட வர்த்தமானி வெளியானது!

0

தனிமைப்படுத்தல் தொடர்பில் புதிய சட்டங்கள் உள்ளடக்கப்பட்ட விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பேணல் மற்றும் முகக் கவசங்களை அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதாரப் பாதுகாப்பு முறைகள், குறித்த வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சட்டங்களை மீறும் நபர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாவுக்கு மேற்படாது அபராதம் விதிக்கவும், ஆறு மாத கால சிறைத் தண்டனை விதிக்கவும் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வர்த்தக நிலையங்கள் மற்றும் சேவை நிலையங்களுக்கு செல்லும் போது, கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வர்த்தக நிலையங்கள் மற்றும் சேவை நிலையங்களில் பின்பற்றப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பணியிடங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்குள்ளும் பிரவேசிக்கும் அனைவரும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசம் அணிந்து இருத்தல்.

இருவருக்கிடையில் ஒரு மீட்டருக்கு குறையாத சமூக இடைவெளியை கடைப்பிடித்தல்.

பணியிடங்களுக்கு பிரவேசிப்பதற்கு முன்னர் அனைத்து நபர்களும் உடல் வெப்பத்தை அளவிடுதல்.

கிருமிநாசினி திரவத்துடன் போதுமான வகையில் கைகளை கழுவுவதற்கான வசதிகளை வழங்குதல்.

உட்பிரவேசிக்கும் அனைத்து நபர்களினதும் பெயர், அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொடர்பை ஏற்படுத்த கூடிய தகவல்கள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய ஆவண பதிவை மேற்கொள்ளல்.

பணியிடங்களில் ஆகக்கூடிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் ஏனைய நபர்களின் எண்ணிக்கை மேற்படாத வகையில் வைத்துக்கொள்ளுதல்.

பயண வரையறை தனிமைப்படுத்தல் அலுவல்கள் போக்குவரத்து அலுவல்கள் போன்ற விசேட விடயங்களுக்கான சட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.