சுகாதார வழிமுறைகளை பின்பற்றினால் நாட்டை முடக்குவதற்கு அவசியம் இருக்காது – விசேட வைத்திய நிபுணர் பாலித்த

0

சுகாதார வழிமுறைகளை பொது மக்கள் பின்பற்றி நடந்தால் நாட்டை முழுமையாக முடக்குவதற்கான அவசியம் இருக்காது என உலக சுகாதார நிறுவன பணிப்பாளர் நாயகத்தின் கொவிட் 19 தொடர்பான தென் கிழக்காசிய வலயத்துக்கான சிறப்பு தூதர், விசேட வைத்திய நிபுணர்  பாலித்த அபேகோன் தெரிவித்தார்.

உலகெங்கிலும் கொவிட் 19 கொரோன வைரஸ் தொற்றினால் நாளுக்கு நாள் பொது மக்கள் பலரும் பாதிப்படைந்து வருகின்றனர். இதனை தடுப்பற்காக ஒவ்வொரு நாடுகளும் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றதாக அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து அவர் கூறுகையில்,

“ஏனைய நாடுகளைக் காட்டிலும் எமது நாட்டில் ஏற்பட்டுள்ள மரணங்களின் எண்ணிக்கையை குறைவாக வைத்துக்கொள்வதற்கு எமது சுகாதாரத்து துறையினரால் முடிந்துள்ளது.

எமது வைத்திய கட்டமைப்பு சிறப்பான நிலையில் காணப்படுவதனாலேயே இது சாத்தியமானது. எனினும், இது எந்த நேரத்திலாவது கீழே விழக்கூடும்.

நாம் தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளை பேணுவதால் கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ளலாம்.

அதனை தடுப்பதற்கு மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். நாம் கவனக் குறைவாக இருந்தோமானால், இரண்டு அல்லது மூன்று வாரங்களில் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கூடும்.

பொதுக் கூட்டங்கள் நடத்துவதை தவிர்த்துள்ளமை, வேலையாட்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளமை, பாடசாலை மூடப்பட்டுள்ளமை போன்ற விடயங்களால் கொரோனா தொற்று மேலும் பரவுவதை கட்டுப்படுத்த முடிந்துள்ளது.

மேலும், பொது மக்கள் சுகாதார வழிமுறைகளை தொடர்ந்தும் அவதானத்துடன் கடைப்பிடித்தால் நாட்டை முழுமையாக முடக்கப்படுவதற்கான அவசியம் இருக்காது. எனினும், தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள பிரதேசங்களை முடக்குவது அவசியமாகும்” என்றார்.