சுகாதார விதிமுறைகளை மீறிய பொலிஸார் – சட்டம் மற்றவர்களுக்கு மட்டும் தானா?

0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் இடங்களுக்கு சென்று சுகாதார விதிமுறைகளை காரணமாக சொல்லி நிகழ்வுகளை பொலிசார் குழப்பும் விதமாக செயற்பட்டு வருகின்றனர்.

ஆனால் பொலிசார் சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிக்க தவறியுள்ளமையால் பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.

நேற்றைய தினம் இரவு 7 மணிக்கு யாழ்.பல்கலை கழக மாணவர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய போது அவ்விடத்திற்கு வந்த பொலிசார் சுகாதார விதிமுறைகள் தொடர்பில் மாணவர்களுக்கு நீண்ட விளக்கம் கொடுத்தனர்.

அதில் யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.வீரசிங்க ஆகியோரும் மாணவர்களுக்கு சுமார் 10 நிமிடங்கள் கொரோனோ தொடர்பான விளக்கங்களை கொடுத்தனர்.

ஆனால் அந்த பொலிஸ் குழுவில் இருந்த இரண்டு பொலிசார் முககவசம் அணியாது அவ்விடத்தில் நின்றிருந்தனர்.

அதேவேளை கைக்கு கையுறை எதுவும் அணியாது வெற்று கைகளால் மாணவர்களின் அடையாள அட்டைகளை வாங்கி விபரங்களை பதிந்தனர்.

முக கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பொலிசார் முக கவசம் அணியாது அவ்விடத்தில் பிரசன்னம் ஆகியிருந்தனர்.

அதேவேளை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தந்தை செல்வா நினைவிடத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வின் போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா கையுறை அணியாது நிகழ்வில் கலந்து கொண்டமைக்கு யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ சுமார் 10 கொரோனோ பற்றிய விளங்கங்களையும் சுகாதார நடைமுறைகள் பற்றியும் விளக்கம் கொடுத்திருந்தார்.

அதேபோன்று நேற்று முன்தினம் செம்மணியில் நடைபெற்ற நிகழ்விலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு விளக்கம் கொடுத்திருந்தார்.

அதுமட்டுமின்றி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.நகர் பகுதியில் நின்று வீதியில் செல்வோர் உரிய முறையில் முககவசம் அணிய வேண்டும் என வீதியில் செல்வோரை மறித்து விளக்கம் கொடுத்தும் இருந்தார்.

இந்நிலையில் அவரது பொலிஸ் குழுவில் உள்ள பொலிசார் சுகாதார முறைகளை கடைப்பிடிக்காது முக கவசம் கூட அணியாது பொது இடங்களில் கடமையாற்றி வருவது பலர் மத்தியில் விசனத்தை உண்டு பண்ணி உள்ளது.