சுனில் ரத்னாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ள ஜனாதிபதியின் செயலுக்கு சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளார்.
முன்னாள் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானம், சமூகத்திற்கு கவலையளிக்கும் செய்தி எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பிலான பொறுப்புகூறல் மிகவும் குறைந்தளவிலேயே உள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரிய குற்றச்சாட்டுகளுக்காக தண்டனை பெற்ற ஒருவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதன் மூலம் அதற்கு இணையான குற்றங்களை இழைக்கும் ஒருவர், சட்டத்தின் முன் குற்றவாளியாகக் காணப்பட்டாலும் அவருக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பதை பிரதிபலிப்பதாக சர்வதேச பொதுமன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் ஜனாதிபதி தெரிவித்தவாறு இத்தகைய தீர்மானங்களை எதிர்காலத்திலும் மேற்கொள்வதற்கான சாத்தியம் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவும் சூழலை பயன்படுத்தி இத்தகைய குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதை அருவெறுப்புடன் கண்டிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.