தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நியமிக்கப்பட்ட சட்ட நிபுணர்கள் குழு கடந்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டு அங்குப் பல சந்திப்புகளை மேற்கொண்டிருந்தது.
முக்கியமாக இந்தக் குழு கடந்த புதன்கிழமை அமெரிக்காவின் பாதுகாப்பு திணைக்களத்தின் முக்கிய பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
எனினும் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பான விபரங்கள் எவையும் உத்தியோகபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது கனடா சென்றுள்ள எம்.ஏ.சுமந்திரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்து கொள்வாரெனத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் இருவரும் கனடாவில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளனர்.
அதன் பின்னர் மீண்டும் அமெரிக்காவுக்கு சென்று, அந்நாட்டு அரசாங்கத்துடனும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.
இதையடுத்து, பிரித்தானியாவுக்கான விஜயத்தையும் இந்தக் குழு மேற்கொண்டு, பிரித்தானியாவின் வெளிவிவகார செயலக அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.