சுவிஸ் போதகர் கூறிய பொய்யே யாழில் இந்நிலைக்குக் காரணம்: அனைவரும் பொறுப்புடன் செயற்படுக!- மருத்துவர் முரளி

0

காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இருந்தும் சுவிஸ் போதகர் விமான நிலையத்தில் பொறுப்பில்லாமல் கூறிய பொய்யினால் யாழ். மாவட்டம் இன்று இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டிருக்கும் சமுதாய மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக 7 பேர் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் இனிமேலும் யாழ்.மாவட்டம் பாதுகாப்பாக இருக்க அனைவருக்கும் பொறுப்புணர்வு வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களைச் சந்தித்து கருத்துக் கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் கூறுகையில், “யாழ்.மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. சுவிஸ் போதகருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் முதற்கட்டப் பரிசோதனைகள் நிறைவடைந்திருக்கின்றன. எனினும் முதற்கட்டப் பரிசோதனையில் 80 தொடக்கம் 90 வீதமானதே தொற்றே அடையாளம் காணப்படும்.

ஆகவே 2ஆம், 3ஆம் கட்டப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்மூலம் தொற்றுள்ளவா்கள் பூரணமாக அடையாளம் காணப்படுவதுடன், தொடர்ந்து ஊரடங்குச் சட்டத்தின் ஊடாக சமூக இடைவெளி பேணப்படுவதன் ஊடாக யாழ். மாவட்டத்திலிருந்து கொரோனா தொற்றை முற்றாக நீக்க முடியும்.

இது இலங்கையின் பிற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக அமையும். மேலும், மாவட்டத்தில் தொற்று இல்லாமையினைத் தொடர்ந்து பேணுவதற்காக சில கட்டுப்பாட்டு முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பாக யாழ்.மாவட்டத்திற்குள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளியிடங்களில் இருந்தும் உள்நுழைவதற்கு 2 தரைவழி பாதைகளே உண்டு.

அந்தப் பாதைகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதுடன், காய்ச்சல் மற்றும் தொற்று தொடர்பான ஆரம்ப பாிசோதனைகளை மேற்கொள்வதற்கான வதசிகளை செய்வதன் ஊடாக நிரந்தரமாக நோய்த் தொற்றை கட்டுப்படுத்தலாம். அதற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்குள் நுழைபவர்கள் நேர்மையாக தங்களுக்கு அறிகுறிகள் இருந்தால் அதனை வெளிப்படுத்தவேண்டும்.

குறிப்பாக சுவிஸ் போதகர் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தும் விமான நிலையத்தில் உண்மையை மறைத்து பொய் கூறியதால் 7 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி யாழ். மாவட்டத்தில் இன்று இந்தநிலை ஏற்பட்டிருக்கின்றது. மக்களும் பாதுகாப்பாக இருந்து தொற்றிலிருந்து விடுபட உதவ வேண்டும்” என்றார்.