சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்படாது?

0

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஐந்து மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையிலும், அது ஏற்படுத்தி வரும் அச்சுறுத்தல் சிறிதும் குறைந்தபாடில்லை. குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவலுக்கு ஈடாக அதுகுறித்த போலிச் செய்திகளும் அதிவேகமாக பரவி வருகின்றன.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பான சில போலிச் செய்திகள் குறித்த பின்னணியை பார்ப்போம்.

1. மருத்துவர்கள் சைவ உணவுமுறையை பரிந்துரைக்கவில்லை

இந்தியாவின் இரண்டு முக்கிய மருத்துவ அமைப்புகள் மற்றும் அந்த நாட்டின் மூத்த மருத்துவர் ஒருவர் ஆகியோர் வாட்சாப்பில் பரவி வரும் ஒரு குறிப்பிட்ட போலிச் செய்திக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர்.

வைரலாக பரவி வரும் அந்த குறுஞ்செய்தியில், கொரோனா வைரஸ் தொடர்பான மற்ற வாட்சாப் பகிர்வுகளை போன்றே, நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து உங்களை தற்காத்து கொள்வது எப்படி, தனிப்பட்ட சுகாதாரத்தை பேணுவது எப்படி உள்ளிட்ட விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகள் பலவும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இருந்தாலும், அதில் சைவ உணவுமுறையை பின்பற்றுதல், பெல்ட், மோதிரங்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவற்றை அணிவதை தவிர்த்தல் முதலிய ஆலோசனைகள் கொரோனா வைரஸில் இருந்து தற்காத்து கொள்ள உணவும் என்று கூறப்பட்டுள்ளதற்கு இதுவரை ஆதாரங்கள் எதுவும் இல்லை.

2. காய்ச்சலுக்கான தடுப்பூசியால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுமா?

ஒரு உண்மையான ஆராய்ச்சியை மேற்கோள்காட்டி, அதன் மூலம் இந்த தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

“நீங்கள் காய்ச்சலுக்கான ஊசியை போட்டிருந்தால், உங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது” என்று பரவலாக பகிரப்பட்டு வரும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பதிவில், அமெரிக்க ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி கட்டுரை ஒன்றின் இணையப்பக்கமும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஆய்வு கட்டுரையானது கோவிட்-19 நோய்த்தொற்று பரவுவதற்கு முன்னர், அதாவது 2017-18 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வை அடிப்படையாக கொண்டது ஆகும்.

எனவே, குழப்பமே வேண்டாம் – காய்ச்சலுக்காக ஊசி போடுவதால் கொரோனா வைரஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது என்ற கூற்றுக்கு இதுவரை எவ்வித ஆதாரமும் இல்லை.

3. நீண்டநேரம் முகக்கவசம் அணிந்தால் பிரச்சனையா?

நீண்டநேரம் முகக்கவசம் அணிவது உடல்நலனுக்கு ஆபத்தானது என்ற தவறான செய்தியை பரப்பும் கட்டுரை ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

முதலில் ஸ்பானிஷ் மொழியில் பரவலாக பகிரப்பட்ட இந்த கட்டுரை, பிறகு தென் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளிலும், நைஜீரியாவிலும் பரவியது.

நீண்ட நேரம் முகக்கவசங்களை அணிந்துகொண்டு சுவாசிக்கும்போது, அதிகளவில் கரியமில வாயு உள்ளிழுக்கப்படுவதாகவும், இதனால் மயக்க உணர்வு ஏற்படுவதுடன், உடலில் ஆக்சிஜன் இழப்பு நேருவதாகவும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை முகக்கவசங்களை கழற்றி அணிய வேண்டும் என்று அந்த கட்டுரை பரிந்துரைக்கிறது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த மருத்துவர் ரிச்சர்ட் மிஹிகோ, “இந்த கூற்று மிகவும் தவறானது. எளிதில் சுவாசிக்கக் கூடிய துணிகளை கொண்டே முகக்கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன. இயல்பான சுவாச உணர்வை அளிப்பதோடு, தீமை பயக்கும் துகள்கள் மூக்கின் உள்ளே செல்வதை அவை தடுக்கின்றன” என்று அவர் கூறினார்.

தீங்கு விளைவிக்கும் தாக்கங்களை தவிர்ப்பதற்காக மக்கள் முகக்கவசங்களை அடிக்கடி கழற்றி அணிவதால் சுகாதார கேடு ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளதாக அவர் எச்சரிக்கிறார்.

நுரையீரல் முழுவதும் வளர்ச்சியடையாத இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சுவாசம் சார்ந்த பிரச்சனையால் அவதிப்படுவோர் ஆகியோர் முகக்கவசங்களை அணியவதற்கு பரிந்துரைக்கப்படுவதில்லை.

4. புகைப்பிடித்தல் வைரஸைத் தடுக்க உதவாது

மீண்டும் மீண்டும் பரவி வரும் இந்த கூற்று உண்மையாக இருக்க வேண்டுமென்று புகைப்பிடிப்பவர்கள் நினைக்கிறார்கள் – ஆனால், இது உண்மையல்ல.

அதாவது, புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாக பல கட்டுரைகள் இணையதளத்தில் உலாவினாலும், அதை உறுதிசெய்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

“கொரோனா வைரஸ் அபாயத்தை புகைப்பிடித்தல் குறைக்கும் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன” என்று கூறும் ‘யூ.கே. மெயில் ஆன்லைன்’ செய்தித்தளத்தின் கட்டுரை ஒன்று சமூக ஊடகங்களில் பல்லாயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு வருகிறது.

கோவிட் -19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் புகைப்பிடிப்பவர்கள் குறைவாகவே காணப்படுகிறார்கள் என்று பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும், எனினும் இதில் வல்லுநர்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிக்கோடின் கோவிட்-19 நோய்த்தொற்று பரவுவதை நிறுத்தக்கூடும் என்று இதுதொடர்பாக ஆய்வு நடத்திய பிரான்ஸ் மருத்துவமனை ஒன்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பான மேலதிக ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், “கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்கவோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலோ நிக்கோட்டின் அல்லது புகையிலைக்கு தொடர்பு உள்ளதாக இதுவரை தேவையான அளவு ஆதாரங்கள் ஏதும் இல்லை” என்று தெரிவித்துள்ளது.

புகைப்பிடிப்பதோடு தொடர்புடைய பிற உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக புகைபிடிப்பவர்கள் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக அது மேலும் கூறுகிறது.