பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்களில், இதுவரை தமது சொத்து விபரங்களை அறிவிக்காத வேட்பாளர்களின் பெயர்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் களமிறங்கிய வேட்பாளர்கள், வேட்பு மனுத் தாக்கல் செய்து முதல் மூன்று மாதங்களுக்கு தமது சொத்து விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பதற்கு முன் தமது சொத்து விபரங்கள் அடங்கிய அறிக்கைகளை தேர்தல் ஆணைக்குழுவில் சமர்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வேட்பு மனுத் தாக்கல் செய்து தற்போது சுமார் ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ளதாக பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் ஏழாயிரத்து 452 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்த நிலையில், அவர்களில் பெரும்பாலனவர்கள் இதுவரை தமது சொத்து விபரங்களை வெளிப்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சொத்து விபரங்களை அறிவிக்காதவர்களின் பெயர்ப் பட்டியலைக் கோரி, தகவல் அறியும் சட்டத்தின் கீழ், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விண்ணப்பமொன்றை அனுப்பியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு பதில் கிடைத்தவுடன் அது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.