மத சிறுபான்மையினர் தங்கள் சொந்த மரபுகளிற்கு ஏற்ப உறவினர்களின் இறுதிசடங்குகளை செய்வதற்கு உள்ள உரிமையை இலங்கை அதிகாரிகள் மதிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
நெருக்கடியான தருணத்தில் அதிகாரிகள் சமூகங்களை இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் ஏற்கனவே உள்ள விரிசல்களை ஆழமாக்க முயலக்கூடாது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் பிராஜ் பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக துயரத்தில் உள்ள உறவினர்கள் தாங்கள் விரும்பும் விதத்தில் தங்கள் குடும்பத்தவர்களிற்கு இறுதி மரியாதையை செலுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச வழிகாட்டுதல்களிற்கு ஏற்ப இது சாத்தியமாக உள்ள பட்சத்தில் அதற்கான அனுமதி வழங்கப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் “இலங்கை அரசாங்கம் மார்ச் 27 ம் திகதி வெளியிட்ட அறிவுறுத்தல்கள் இறந்தவர்களின் உடல்களை பாதுகாப்பாக கையாள்வது குறித்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தல்களை அடிப்படையானவையாக காணப்பட்டன.
இதில் இறந்தவர்களின் உடல்களை புதைப்பது அல்லது தகனம் செய்வது குறித்து சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. எனினும் மார்ச் 31 ம் திகதி கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் உடல்களை தகனம் செய்யும் விதத்தில் இலங்கை அரசாங்கம் தனது கொள்கையை மாற்றியமைத்தது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களில் இருந்து விலகியமைக்கான காரணத்தை இலங்கை அரசாங்கம் இன்னமும் வெளியிடவில்லை. இதன் காரணமாக இந்த நடைமுறைகள் பொது சுகாதாரத்தை பாதுகாப்பதற்கு அவசியமற்றவை என்ற கரிசனை எழுந்துள்ளது.
இலங்கையில் 9 வீதமாக காணப்படும் முஸ்லீம் சமூகத்தினரிற்கு இஸ்லாமிய பாரம்பரியத்தின் அடிப்படையில் உடல்களை புதைப்பது அவசியம் என கருதுகின்றனர். நீர்கொழும்பில் உயிரிழந்தவரின் உடல் உறவினர்கள் சமூக தலைவர்கள் முஸ்லீம் அரசியல்வாதிகளின் எதிர்ப்பிற்கு மத்தியிலும் எரியூட்டப்பட்டது.
உயிரிழந்த இரண்டாவது முஸ்லீம் பிரஜையின் உடலும் தகனம் செய்யப்பட்டது. பலவந்தமாக தகனம் செய்யப்படுவது முஸ்லீம் மக்கள் மத்தியில் தாங்கள் அதிகாரிகளால் இலக்குவைக்கப்படுகின்றோம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத மற்றும் கலாச்சார உணர்வுகளை கருத்தில் கொள்ளும்போது இலங்கை அரசாங்கம் மத இறுதிசடங்குகளும் நடைமுறைகளும் மதிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுக்கின்றது.
மேலும் சர்வதேச விதிமுறைகள் பின்பற்றப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ள மன்னிப்புச்சபை குறிப்பிட்ட சமூகத்தினருடன் கலந்தாலோசனைகளை மேற்கொண்ட பின்னர் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றது.
கொரோனா வைரஸ் குழுக்களிடையே பாரபட்சம் பார்ப்பதில்லை, அனைத்து மதத்தவர்களும், அதனால் பாதிக்கப்படடுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.