ஜனநாயகத்துக்கான எமது போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – எம்.ஏ.சுமந்திரன்

0

நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கின்றோம் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “ஒன்றை மட்டும் இவ்வேளையில் கூறிக்கொள்ள முடியும். ஜனநாயகத்துக்கான எமது போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

நீதிமன்ற சுயாதீனம் தொடர்பாக யாருக்கும் சந்தேகம் கிடையாது. அது சுயாதீனத்தன்மையுடன்தான் இருக்கிறது. நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இரண்டு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. ஜுன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியாது என்று நாம் கூறியிருந்தோம்.

அடுத்ததாக, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்தால் ஜனாதிபதியின் அறிவிப்பு செல்லுபடியற்றதாகி விடும் என்றும் தெரியப்படுத்திருந்தோம்.

எமது முதலாவது தர்க்கம் தொடர்பாக, தேர்தல்கள் ஆணைக்குழு நீதிமன்றில் கருத்தினை முன்வைத்திருந்தது. அந்தவகையில், குறித்த தினத்தில் தேர்தலை நடத்த முடியாது என்றே ஆணைக்குழு மன்றில் சுட்டிக்காட்டியிருந்தது.

சரித்த குணரத்னவின் மனுவை நாம் வாபஸ் பெற்றுக் கொண்டோம். ஏனைய மனுக்களில், எமது இரண்டாவது தர்க்கம் முன்வைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக 10 நாட்கள் வாதப் பிரதிவாதங்கள் மன்றில் முன்வைக்கப்பட்டன.

எனினும், பிரதான விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மனுக்களுக்கு சட்டரீதியாக எந்தவொரு அடிப்படைக் காரணமும் இல்லை என்ற காரணத்தினாலேயே வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் தெரிவிக்கப்படாத நிலையில், வரும் நாட்களில் அறிவிக்கப்படாலாம் என்றே நாம் நினைக்கிறோம். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவானது, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையானது சட்டரீதியானது என்ற அடிப்படையில் தான் செயற்படும் என மன்றில் தெளிவுப்படுத்தப்பட்டது“ எனத் தெரிவித்துள்ளார்.