ஜனநாயக நாடு என்ற அந்தஸ்த்தை இழக்கும் ஆபத்து – சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ

0

ஜூன் முதலாம் திகதிக்கு முன்னர் நாடாளுன்றம் மீண்டும் செயற்படாவிட்டால் இலங்கை ஜனநாயக நாடு என அங்கீகரிக்கப்படுவதற்கான தகுதியை இழக்கலாம் என சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஜூன் 20 திகதி தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையகத்தின் அறிவிப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எட்டு அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றவேளையே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பிக்க ரணவக்க, குமாரவெல்கம ஆகியோரின் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியுள்ள சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ மேற்குறிப்பிட்ட வாதத்தினை முன்வைத்துள்ளார்.

தற்போதைய அரசமைப்பு நெருக்கடி 2018 சதிமுயற்சியை விட ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர் நீதிமன்றம் இந்த விடயத்தில் தலையிட்டு ஜூன் முதலாம் திகதிக்கு முதல் இந்த முட்டுக்கட்டை நிலைக்கு முடிவை காணவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தை செயல் இழக்கச்செய்வதற்கான துப்பாக்கியை வழங்கும்படி நீதிமன்றத்தை கோரியுள்ளார் என சுரேன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

துப்பாக்கியொன்றில் ஒன்றிற்கும் அதிகமான ரவைகள் இருக்கும் என்பதை நாங்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். நாடு அரசாங்கத்தின் மூன்று கட்டமைப்புகளால் நிர்வகிக்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2018 சதிமுயற்சியை விட நாட்டின் ஜனநாயகத்திற்கு தற்போது ஆபத்து அதிகமாக உள்ளது. அவ்வேளை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் புதிய நாடாளுமன்றத்தை ஏற்படுத்தக்கூடிய நிலைமை காணப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ள சுரேன் பெர்ணான்டோ தற்போதைய சூழ்நிலையில் நாடு நாடாளுமன்றமின்றி நீண்டகாலம் நிர்வகிக்கப்படக்கூடிய நிலை காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.