ஜனாதிபதி செயலணிக்கும் யுனிசெப் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு!

0

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுவர் நிதியத்தின் (யுனிசெப் நிறுவனம்) அதிகாரிகளுக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அலரி மாளிகையில் நேற்று(புதன்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்ததாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கோவிட் 19 வைரஸ் நிலைமை காரணமாக உலகம் முழுவதும் தேவைப்படும் பாதுகாப்பான ஆடைத் தயாரிப்புகளுக்கு (Personal protective Equpments ) காணப்படும் கேள்விக்கு ஏற்ற வகையிலான தயாரிப்பை இலங்கையில் மேற்கொள்ள முடியுமா என்பது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

பசில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுவர் நிதியத்தின் நிரந்தரப் பிரதிநிதி முராத் மொஹிதீன் (Muradh Moheieldin), ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிகர் (Hanaa Singer) மற்றும் ஆடைத் தயாரிப்புத் துறை சார்ந்த உள்நாட்டுக் கைத்தொழிலாளர் குழுவினர் பங்குபற்றினர்.

அத்துடன் இந்தக் கலந்துரையாடலில் டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரம் மற்றும் நேபாளத்தின் காத்மண்டு நகரத்திலுள்ள யுனிசெப் நிறுவனத்தின் பிரதிநிதிகளும் நேரடியாக வீடியோ தொழிநுட்பம் ஊடாக இணைந்துக் கொண்டனர்.

இதன்போது முக்கியமாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுவர் நிதியத்திற்கு வாரமொன்றில் ஒரு மில்லியன் கையுறைகளும், 10 மில்லியன் முகக் கவசங்களும் தேவைப்படுவதாகவும், அந்த வழங்கலை வாராந்தம் இலங்கையிலுள்ள ஆடைத் துறை சார்ந்த தொழிற்சாலைகள் ஊடாக நிறைவேற்றிக் கொள்ள முடியுமா என்ற விடயம் கலந்துரையாடப்பட்டது.

அதற்கேற்ப, பாதுகாப்பான ஆடைத் தயாரிப்புகளுக்காக இந்நாட்டு ஆடைத் தொழிற்சாலைகளுக்கு அவசியமான ஒருங்கிணைப்பை வழங்க இலங்கை முதலீட்டுச் சபையின் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அந்தக் குழுவின் அங்கத்தவர்கள் நாளாந்தம் ஒன்றுகூடி ஏற்படும் சிக்கல்கள் தொடர்பாக கலந்துரையாடி தீர்வுகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுவர் நிதியம் ஏற்புடைய பாதுகாப்பு ஆடைகளைக் கொள்வனவு செய்வதற்கும், அந்த தயாரிப்புகளின் தரநியமம், நிலைமை தொடர்பான சான்றில் ஒன்றை வழங்கும் முறைமையொன்றைத் தயாரிப்பதற்கும், எதிர்வரும் மூன்று மாதங்களினுள் இந்தப் பணியை மேற்கொள்வதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.