ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் நோக்குடன் பதவி விலகல் கடிதத்தை கையளித்தார் அலி சப்ரி?

0

அமைச்சு பதவி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஆகியவற்றிலிருந்து விலகும் வகையில், தனது இராஜினாமா கடிதத்தை, நீதி அமைச்சர் அலி சப்ரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி, த லீடர் செய்தி வெளியிட்டுள்ளது.

இராஜினாமா கடிதத்தை இன்று (29) காலை ஜனாதிபதியிடம், நீதி அமைச்சர் கையளித்துள்ளார்.

எனினும், நீதி அமைச்சரின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் நோக்குடன், நீதி அமைச்சர் இவ்வாறான கடிதமொன்றை கையளித்துள்ளார் என நம்புவதாக அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யும் விவகாரத்தினால் முஸ்லிம் சமூகத்திற்குள் எழுந்துள்ள எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக, நீதி அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் மன உலைச்சலில் உள்ளதாக, அவரது நெருங்கியவர்கள் கூறியுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யும் விவகாரத்தினால் முஸ்லிம் சமூகத்திற்கு அதிருப்தி நிலைமை அதிகரித்து வருகின்றது எனவும், இதனால் சில தரப்பினர் ஆயுதம் ஏந்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி, ராவய சிங்கள பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தினால் முஸ்லிம் இளைஞர்கள் ஒரு இடத்தை நோக்கி தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர், அந்த பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் மேலும் கூறியுள்ளார்.

நீதி அமைச்சரின் இந்த கருத்தை அடுத்து, ஆளும் கட்சியின் பங்காளி கட்சியான ஜாதிக்க பலவேகய கடும் எதிர்ப்பை வெளியிட்டது.

நீதி அமைச்சர் அலி சப்ரி தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என ஜனாதிபதியின் நெருங்கிய உறவுகளை கொண்ட பிக்குவாக கருதப்படும் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்கள் அனைத்தும் தகனம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி, பிக்குகள் சிலர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நேற்றைய தினம் (28) எதிர்ப்பு பேரணியூடாக வலியுறுத்தியிருந்தனர்.

இதேவேளை, முஸ்லிம்களுக்கு எதிராக ராஜபக்ஷ குடும்பம் செயற்படுகின்றது என்ற எண்ணம் எழும் பட்சத்தில், தான் அந்த இடத்தில் இருக்க போவதில்லை என அலி சப்ரி நிகழ்வொன்றில் கூறியிருந்ததை த லீடர் காணொளியூடாக நினைவூட்டியுள்ளது.