ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை மீள வழங்குவது குறித்து ஆராயும் ஐரோப்பிய ஒன்றியம் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள கோரிக்கை!

0

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்ந்தும் மீறப்படுவதை தடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை மீள வழங்குவது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்ற நிலையிலேயே, ஐரோப்பிய ஒன்றியத்திடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

அதன்படி, மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான சிறந்த தருணம் வந்துள்ளதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம், சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக சீரமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதிகள் 7 பேர் ஒன்றிணைந்த அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.

பங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியமை கவலையளிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த ஒன்றிணைந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.