ஜெனீவாவில் இலங்கை குறித்து கவலை வெளியிட்டார் மிச்சேல்

0

ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வில் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட்ட் தனது தொடக்க உரையில் இலங்கை குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

ஐ.நா.மனித உரிமை பேரவையின் 44வது அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர், மனித உரிமைகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கதிற்கு மத்தியில் இலங்கையில் முஸ்லீம் சமூகத்தினர் இலக்குவைக்கப்படுவது கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மிச்சேல் பச்லெட் மேலும் தெரிவிக்கையில், “பல உலகநாடுகளில் சிறுபான்மையினத்தவர்களும், குடியேற்றவாசிகளும் அதிகளவு களங்கத்திற்கு ஆளாகின்றமை குறித்த தகவல்களால் கவலையடைந்துள்ளேன்.

குறிப்பாக இலங்கையிலும் இந்தியாவிலும், முஸ்லீம் சமூகத்தினர் களங்கம் ஏற்படுத்துவது, வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் அவர்களை COVID-19 உடன் தொடர்புபடுத்தி இலக்கு வைக்கின்றனர்.

பல்கேரியாவில், ரோமா மக்கள் பொது சுகாதார அச்சுறுத்தலாக களங்கப்படுத்தப்பட்டுள்ளனர், சில உள்ளூர் அதிகாரிகள் ரோமா குடியேற்றங்களைச் சுற்றி சோதனைச் சாவடிகளை அமைத்து முடக்கநிலையை செயற்படுத்துகின்றனர்.

பாகிஸ்தானில், மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சு கடுமையானதாகவே உள்ளது. கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் மக்களுக்கு எதிரான களங்கம் மற்றும் அச்சுறுத்தல்கள் ஹைட்டி, ஈராக் மற்றும் பல நாடுகளிலும் பதிவாகியுள்ளன.” என கூறினார்.