ஜோசப் பரராஜசிங்கம் என்பவரை நான் கண்டதே கிடையாது – விடுதலையானவுடன் பிள்ளையான்

0

பல அசிங்கங்களை நல்லாட்சி அரசாங்கம் நடாத்தியபோது அதனை கண்டுகொள்ளாதவர்கள் இன்று ஊடகதர்மம்,சட்டம்,பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் குரல்கொடுப்பதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தினை உருவாக்கிய பிதாமக்கள் என்னை தண்டிக்கவேண்டும் மற்றவர்களை விடுதலைசெய்யவேண்டும் என இரட்டைமுகத்தினை காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நான் ஜோசப் பரராஜசிங்கம் என்பவரை கண்டதே கிடையாது.ஒரு தடைவ தூரத்தில் இருந்து பார்த்துள்ளேன். இவ்வாறான நிலையில் அவரை கொலை செய்ததாக வீண்பழியை சுமத்தி சிறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைத்தது.

ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு தோல்வி அடைந்தார். விடுதலைப்புலிகள் அன்றைய காலத்தில் வெற்றிபெற்றவர்களை கொலை செய்துவிட்டு வேறு நபர்களை நியமனம் செய்தது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். அது தொடர்பில் எந்தவித விசாரணைகளும் செய்யப்படவில்லை.

நாளை தைப்பொங்கல். தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் அந்தவகையில் எனக்கான நீதித்துறையினுடைய அறிவிப்பு வந்துள்ளது. இன்று மட்டக்களப்பு மேல்நீதிமன்ற என்னுடைய வழக்கிலிருந்து என்னை முழுதாக விடுவித்து விடுதலைசெய்துள்ளது.

அனைவருக்கும் தெரியும் நான் 2015.10.11 கொழும்பிலே குற்றப்புலனாய்வு பிரிவினரிடன் இடத்திற்குச் செல்கின்றபோது ஊடகங்களுக்கு சொன்னேன் நல்லாட்சி அரசாங்கம் என்னை பழிவாங்க நினைக்கின்றது.

யாருக்கோயெல்லாம் பாவிக்கமுடியாத சட்டத்தை, அப்பாவியாக அரசியல் செய்துகொண்டிருக்கின்ற எனக்கு பாவிக்க முனைகிறது எனக்கூறினேன். பின்னரும் நான் கிட்டத்தட்ட 1869 நாட்கள் சிறைச்சாலையில் வாடினேன். அனைவருக்கும் தெரியும் சிறைச்சாலை என்றால் எப்படியான நிலைமையிருக்குமென்று.

சாப்பாட்டிலிருந்து, படுக்கையிலிருந்து மழைபெய்தால் குளிரடித்தால் மூட்டைத்தொல்லை, புழுதி இப்படி சொல்லமுடியாத துண்பங்கள் சிறைச்சாலையில் இருக்கின்றது.

என்னை சிறையில் அடைத்து நசுக்கி முன்னாள் முதலமைச்சராகவும் மாகாணசபை உறுப்பினராகவும் இருந்தபோது இதனைச்செய்தார்கள்.

2015ஆம் ஆண்டு வந்த நல்லாட்சி அரசாங்கம் தங்களோடு நின்றர்களுக்கு வழங்கிய பரிசாக இதனைச் செய்தார்கள். அவர்களுக்கு முன்டுகொடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க மைத்திரிபால சிறிசேன அவர்கள் கையொப்பம் இட்டதன் காரணமாக நான் வாடினேன்.

ஆனால் அன்று சிறையில் இருந்தபோது எல்லாம் என்னை வரலாறு விடுதலைசெய்யும் என்று கூறியிருந்தேன். எனக்கு நம்பிக்கையிருந்தது. எனக்கு இந்த வழக்கில் எந்த சம்பந்தமும் இல்லை. ஜோசப் பரராஜசிங்கம் என்பவரை நான் கண்டதே கிடையாது. முறக்கொட்டாஞ்சேனையினால் வந்துகொண்டிருக்கும்போது ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது அதில் தூரத்தில் இருந்தபோது அவரை ஒரு தடைவ கண்டேன். அவருடன் எந்தவிதமான அரசியல் விரோதங்களும் எனக்கு இல்லை.

ஜோசப் பரராஜசிங்கம் 2005இல் மரணிக்கும்போது நான் அரசியலில் இருக்கவும் இல்லை, அரசியல் செய்யும் எண்ணமும் இல்லை. அரசியலுக்கான எந்தமுயற்சியும் எடுத்தவனும் அல்ல. 2008தான் நான் மாகாணசபையில் போட்டியிட்டேன். அந்தவேளையில்தான் எனது முதலாவது வாக்கினைக்கூட செலுத்தினேன்.

அந்த தேர்தலில்கூட முதலமைச்சராக வரவேண்டுமானால் முன்னாள் அரசாங்க அதிபர் மௌனகுருசாமி அவர்களை நிறுத்துவது அல்லது எங்களது கட்சியின் தலைவர் ரகு அண்ணாவினை நிறுத்துவது அவர்களில் ஒருவரை முதலமைச்சராக கொண்டுவருவதற்காகவே நான் தேர்தலில் போட்டியிட்டேன். இருந்தாலும் காலச்சூழல் என்னையும் முதலமைச்சராக்கியது.

அக்கிரமம் செய்து அரசியலுக்கு வரவேண்டிய தேவைப்பாடு எமக்கு இருக்கவில்லை.ஆனாலும் தமிழ்த் தேசிய வாதிகள் என்று நடிக்கின்ற பொய்யாக மக்களை உசுப்பேற்றுகின்ற வேடதாரிகள் கூட்டம் என்னை கிழக்கில் வளரவைத்தால் அவர்களின் அரசியல் அழிந்துவிடும். யாழ்ப்பாணத்தில் இருந்துவந்து இங்கு தேர்தல் கேட்கமுடியாது என நம்பியவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தினை இயற்குவதற்கு துணையாக நின்ற பிதாமக்கள், அவர்களின் வாரிசுகளாக இருந்தவர்களைக் கொண்டு நல்லாட்சியை உருவாக்கி அவர்கள் ஊடாக என்னை சிறையில் அடைத்தார்கள்.

நான் நீதித்துறையினை நம்பி பலமுறை வாதாடினேன் என்னை கைது செய்த காலத்தில் நான் மாகாணசபை உறுப்பினராகயிருந்தேன். அந்த மக்களின் பிரதிநிதியை அடைப்பது என்பது அந்த மக்களின் குரல்வளையினை நசுக்குவதற்கு சமன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2005,2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் பல கொலைகள் இடம்பெற்றிருந்தன. ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு தோல்வி அடைந்தார். அன்று தேர்தலில் வெற்றிபெற்றவர்களை விடுதலைப்புலிகள் சுட்டுக்கொலை செய்துவிட்டு அவர்களுக்குரியவர்களை இந்த மாவட்டத்தில் நியமித்தார்கள். இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு கொல்லப்பட்டவர்களுக்கு எந்தவிதமான விசாரணைகளும் இல்லை.

ராஜன் சத்தியமூர்த்தி கொல்லப்பட்டார்,கிங்சிலி ராஜநாயகம் கொல்லப்பட்டார். பல்கலைக்கழகத்தில் பலர் கொல்லப்பட்டார்கள். அது தொடர்பில் யாருமே பேசுவது கிடையாது. மானிப்பாயில் பிறந்தார்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாரிசுகள் என்ற அடிப்படையில் அவரை மட்டும் முன்னிலைப்படுத்துகின்றனர்.

நள்ளிரவு ஆராதனை நேரத்தில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டபோது ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்டார். இன்றுள்ளவர்கள் அன்றும் இருந்தார்கள் அன்று அந்த நள்ளிரவு ஆராதனையின்போது யாரும் என்னைக் கண்டார்களா, அல்லது நான்தான் சுட்டேன் என்று யாராவது உறுதியாக கூறினார்களா? எதுவுமேயில்லை.

எந்தவித சாட்சியங்களும் இல்லாமல் என்னை அடைத்தார்கள். ஆனாலு{ம் அரசியல் காழ்புணர்ச்சி கொண்டவர்கள் தங்களது அரசியலுக்காகவும் ஊடகங்களில் பணியாற்றுபவர்கள் தங்களது ஊடகத்தினை வளர்ப்பதற்காகவும் எனது கைதினை பயன்படுத்தினார்களே தவிர எங்களுக்கு எவரும் உதவவில்லை.

எங்களது குரல் நசுக்கப்பட்டு, எங்கள் கட்சி ஆதரவாளர்கள் வீதியில் கண்ணீருடன் நின்றபோது எங்களுக்கு எந்த ஊடகமும் உதவிசெய்யவில்லை. பிள்ளையானின் தம்பியின் மனைவி தாக்கப்பட்டு சீஐடியினால் இழுத்துச் செல்லப்பட்டபோது எந்த பெண்ணியவாதியும் அதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை.

பல அசிங்கமான செயற்பாடுகளை நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டது. யாரும் கண்டுகொள்ளவில்லை. இன்று ஊடக தர்மம், சட்டம், பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதிகள் தடுத்துவைக்ககூடாது என்று குரல் கொடுக்கின்றார்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தினை உருவாக்கிய பிதாமக்கள் என்னை மட்டும் தண்டிக்கவேண்டும், விடுதலைசெய்யவேண்டும் என்று இரட்டைமுகத்தினை காட்டுகின்றனர். இதில் என்ன நியாயம் இருக்கின்றது.

எங்களை அகற்றிவிட்டு நீங்கள் அந்த இடத்தினை தக்கவைப்பதற்காக அல்லது உங்களது கைக்கூலிகளை கொண்டுவந்து வேலைசெய்வதற்கான திட்டங்களை வகுக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தோற்றுப்போய் கிடக்கின்ற அசிங்கத்தினை யாழில் பார்க்கமுடியும்.

எங்களது பிணை மனுக்கள் பல தடவைகள் மறுக்கப்பட்டன. சுமந்திரன், மங்கள சமரவீர போன்றவர்கள் தலையீடு செய்தார்கள். நல்லாட்சி அரசாங்கம் நீதித்துறையினை தனக்கு சார்பாக பயன்படுத்தி மக்களையும் எங்களையும் பழிவாங்கியது என்பதற்கு நான்தான் சாட்சியாகும். ஆனால் இன்று ரஞ்சன் ராமநாயக்க நீதித்துறையினை மிகவும் கேவலப்படுத்தினார் என்பதற்காக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வழக்குடன் எனது வழக்கினையும் தொடர்புபடுத்தி எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பேசுகின்றனர்.

நல்லாட்சியில் சுமந்திரனையும் சம்பந்தரையும் யாழ்ப்பாணத்தில் உள்ள சிலரையும் மகிழ்ச்சிப்படுத்துவதற்காக செய்யப்பட்ட குற்றச்சாட்டே என்மீதான குற்றச்சாட்டாகும். சாதாரண நீதியில் என்னை அடைக்கமுடியாது என்பதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தி என்னை அடைத்தனர்.

இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரண்டு சாட்சியங்களை வைத்து வழக்கு நடாத்தமுடியாது என்று தீர்ப்பு வழங்கியதன் காரணமாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் விடுதலைசெய்தது. இவற்றினையெல்லாம் விளங்கிக்கொள்ளாத எதிர்க்கட்சியினர் அரசியலுக்காக பிள்ளையான் ஒரு குற்றவாளி, ஜனாதிபதியின் அதிகாரத்தில் விடுவித்த ஒரு மாயையினை தோற்றுவிக்க நினைக்கின்றார்கள்.

இந்த வழக்கு தொடர்பில் ஜனாதிபதியையோ பிரதமரையோ நான் சந்தித்ததும் கிடையாது கோரியதும் கிடையாது. இந்த வழக்கினை கொண்டு நடாத்தமுடியாது என அனைவருக்கும் தெரியும், ஏன் மைத்திரிபால சிறிசேனவுக்கே அது தெரியும். முழுக்கமுழுக்க நான் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டேன்.

சிறையில் அடைத்தாலும் ஓடி ஒளிந்துகொள்பவன் நான் அல்ல. சிறையில் இருந்தே வடகிழக்கில் எந்த தமிழரும் பெறாத அதிகூடிய வாக்கினை மட்டக்கள்பு மாவட்ட மக்கள் வழங்கினார்கள். இறுதிவரையில் இந்த மண்ணில் இருப்பேன் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

சுமந்திரன் போன்ற பிச்சாப்பயல்கள் கொழும்பில் இருந்துகொண்டு அரசியல் செய்வதற்கு சாணக்கியன் போன்றவர்கள் போன்று அங்கும் இங்கும் அலைந்து சிறுவயதில் அவுஸ்திரேலியா, கண்டி என்று கல்வி கற்றுவிட்டுவந்து நாங்கள் இங்கு அரசியல் செய்யவரவில்லை.

மக்களுடன் நின்று 16வயதில் பாடசாலை கல்வியை தூக்கியெறிந்துவிட்டு போராட்ட இயக்கத்தில் இணைந்து 2005ஆம் ஆண்டு பிரபாகரன் எங்களை அடித்துக்கொல்லும் வரைக்கும் போராடினோம். அவர்கள் எங்களது இரத்தத்தினை உறிஞ்சுவார்கள் என்பதற்காக எங்கது மண்ணையும் மக்களையும் பாதுகாக்க நாங்கள் புறப்பட்டோம்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பல தியாகங்களையும் இரத்தத்தினையும் கலந்த ஒரு கட்சி. நாங்கள் மக்களுக்கு எந்த அநியாயமும் செய்யாமல் மக்களை கட்டிக்காத்து பத்து வருடங்களின் பின்னர் உயர்ந்த நிலைக்கு வந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.