டக்ளஸின் முயற்சியினால் வாழைச்சேனை கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்பு

0

கடலில் காணாமல்போன வாழைச்சேனை கடற்றொழிலாளர்களை மீட்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சி காரணமாக நான்கு வாரங்களின் பின்னர் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஏழு நாட்கள் கடலில் மீன்பிடிக்கும் ஏற்பாடுகளுடன் நான்கு கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் சென்றிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, குறித்த நான்கு கடற்றொழிலாளர்களும் இந்திய கடற்படையினரால் அந்தமான் தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த நிலையில், திட்டமிட்டபடி குறித்த கடற்றொழிலாளர்கள் கரை திரும்பாத நிலையில், சம்பந்தப்பட்ட உறவினர்களினால் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் ஊடாக கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

இவ்விடயத்தில் கவனம் செலுத்திய கடற்றொழில் அமைச்சர், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணித்ததுடன், இலங்கை மற்றும் இந்திய கடற் பாதுகாப்பு தரப்பினருக்கும் தகவலை தெரியப்படுத்தி ஒத்துழைப்பினை கோரியிருந்தார்.

இந்தநிலையில், தற்போது நான்கு கடற்றொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.