டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க தீர்மானம்?

0

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போட்டிகளை எப்படி மாற்றுவது, எந்த நேரத்தில் நடத்துவது போன்ற அம்சங்கள் பற்றி தற்போது ஆராய்ந்து வருவதாக ஏற்பாட்டுக் குழுவில் உள்ள இருவர் தெரிவித்ததாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக உலகில் பல விளையாட்டுப் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

எனினும், இந்த ஆண்டு இடம் பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை எந்தத் தடையுமின்றி திட்டமிட்டபடி நடத்துவதில் ஜப்பானிய அரசாங்கம் தொடர்ந்து ஆர்வம் காட்டிவருகிறது.

ஜப்பான், உள்நாட்டில் மட்டும் 3 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆதரவாளர் நிதியைப் பெற்றுள்ளது.

அத்துடன், ஒலிம்பிக் போட்டிகளுக்காக ஜப்பான் 12 பில்லியன் டொலர் வரை செலவு செய்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் மூலம் ஜப்பானின் பயணத் துறை புத்துயிர் பெறுவதோடு பயனீட்டாளர் செலவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிருமித்தொற்றால் உலகில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது.

உலகின் முன்னணி விளையாட்டாளர்கள் சிலர், இப்படியோர் அசாதாரணமான சூழலில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது பொருத்தமாக இருக்காது என பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.