தடுப்பூசிப் பெற்றுக்கொண்ட வைத்தியருக்கு கொரோனா

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவ வல்லுநருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று (திங்கட்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியர் கொழும்புக்குச் சென்று திரும்பிய நிலையில், தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவித்து, தாமே முன்வந்து பி.சி.ஆர் பரிசோதனையை முன்னெடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற இந்த பரிசோதனையிலேயே அவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய  சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற மருத்துவ வல்லுநர்களின் கலந்துரையாடலின் அடிப்படையில் நோயால் பாதிக்கப்பட்ட மருத்துவ வல்லுநர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் மருத்துவ வல்லுநருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டமை தொடர்பில் எவரும் அச்சமடையத் தேவையில்லை என்றும் வைத்தியசாலையில் உரிய சுகாதார நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர், மருத்துவர் சிறிபவானந்தராஜா தெரிவித்தார்.

குறித்த வைத்தியர் கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸை அண்மையில் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.