தடுப்பூசி தான் தொற்றின் நிரந்தரத் தீர்வுக்கு ஒரே வழி – கு.சுகுணன்

0

தடுப்பூசிகளின் வருகையே காலத்திற்குக் காலம் எம்மைத் தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றிக் கொண்டு வருகின்றது. தடுப்பூசி தான் தொற்றின் நிரந்தரத் தீர்வுக்கு ஒரே வழி என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கு.சுகுணன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,அனர்த்தங்களும் அழிவுகளும் பல நூற்றாண்டு காலமாகப் பூமியில் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த கோவிட் வைரஸ் செயற்கையாகப் பரவியது என்று பல கருத்து வெளியிட்டிருக்கின்றார்கள். ஆனால் வைரஸ் என்பது இயற்கையாகப் பல தடவைகள் எமது சந்ததியரின் காலங்களிலும் வந்திருக்கின்றது.

அனர்த்தங்கள் மூலமாகப் பல அழிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. இவ் அனர்த்தங்களால் கோடிக்கணக்கானவர்கள் பலர் இறந்தும் இருக்கின்றார்கள். நமது நாட்டிலும் நமது பிரதேசத்திலும் அவை இடம்பெற்றிருக்கின்றன.

மனிதர்களால், யுத்தங்களால், ஆயுதங்களால் அழிவுகள் நிறையவே இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு நூற்றாண்டுகளிலும் பல சம்பவங்கள் உலகளாவிய தொற்றுக்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 6ம் நூற்றாண்டில் கறுப்புக் காய்ச்சல் மூலம் கோடிக்கணக்கானவர்கள் இறந்துள்ளார்கள்.

அதேபோன்றொரு சம்பவம் 13ம் நூற்றாண்டில் பிளேக் வைரஸ் மூலம் தொற்று உருவாகி அதிலும் பலர் இறந்திருக்கின்றார்கள். உலகத்தின சனத்தொகையை அரைவாசியாக ஆக்கியிருக்கின்றது.

அந்த கிருமிகளின் தொற்று. எச்.ஐ.வி, கோவிட் போன்ற பல தொற்று நோய்கள் உலகின் சனத்தொகையைக் காலத்திற்குக் காலம் குறைத்து வந்திருக்கின்றது.

அது இயற்கையின் நியதியாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. அந்த அடிப்படையில் தன் கோவிட் வைரசின் ஒரு திரிபான கோவிட் 19 ஆக உருவெடுத்துள்ளது.

இந்தக் கோவிட்- 19இனால் இந்த இரண்டு ஆண்டுகளுக்குள் இன்று வரை உலகத்தில் சுமார் 35 கோடி பேர் பாதிக்கப்பட்டும் 56 லட்சம் பேர் இறந்தும் இருக்கின்றார்கள்.

எமது நாட்டிலும் சுமார் ஆறு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டும் பதினாறாயிரம் பேர்வரை இறந்தும் இருக்கின்றார்கள். இன்று பிளேக், கொளொரா, போலியோ, மஞ்சள் காய்ச்சல், பெரிய அம்மை போன்ற நோய்கள் உலகத்தில் இல்லை. இவற்றுக்கெல்லாம் பிரதானமாக அமைந்தது தடுப்பூசிகள்.

இந்தத் தடுப்பூசிகளின் வருகையே காலத்திற்குக் காலம் எம்மைத் தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றிக் கொண்டு வருகின்றது. தடுப்பூசிகள் புதிதாக உருவாகிய விடயங்கள் அல்ல.

அந்த வகையில் இன்று இருக்கின்ற தொற்று நிலைமைகளை நாங்கள் சில நடைமுறைகள் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றோம்.

ஒருவருக்கொருவர் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெற வேண்டுமாக இருந்தால் அசைவு நிலையை நிறுத்த வேண்டும். அதன் காரணமாகத் தான் பாரிய அளவில் முடக்க நிலையை ஏற்படுத்தியிருந்தோம்.

இந்தக் கோவிட் -19 வைரசில் அல்பா பீட்டா நிலைகள் ஏற்படுத்திய தாக்கம் மிகச் சிறிதானது. ஆனால் அதேநேரம் மக்களின் விழிப்புணர்வும் உச்சக் கட்டத்திலிருந்த காலம் அது. காலம் செல்ல செல்ல மோசமான திருபு நிலைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

டெல்டா என்பது தான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் மோசமான திரிபுநிலை. அந்த நிலை வரும் போது எமக்குள் விழிப்பு நிலை இருந்தாலும் நாங்கள் சில பின்னடைவுகளைக் கண்டிருந்தோம்.

மக்களும் இந்த நோயின் நிலைமை பற்றி முழுமையாக அறிந்திருந்தாலும் உயர்நிலையினர் தொடக்கம் கீழ் நிலையினர் வரை சுகாதாரக் கட்டுப்பாடுகளை வாய்ச்சொல்லால் கூறுவதில் மாத்திரம் கவனஞ் செலுத்திக் கொண்டு செயல் வடிவில் பல இடங்களில் தளம்பல் காட்டுகின்ற நிலைதான் இன்றுவரை தொடர்கின்றது. ஆனாலும் இந்த தடுப்பூசிகளின் ஆரம்பம் அந்த நிலைமையை ஓரளவு புரட்டிப் போட்டிருக்கின்றது.

மூன்றாவது அலையினை நாங்கள் வெற்றிகரமாகத் தாண்டி வந்திருக்கின்றோம். இன்றைய நிலையில் வீரர்களாகச் சித்தரிப்பது பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களையே. இதுவும் ஒரு போர்தான்.

கண்ணுக்குத் தெரியாத உயிர் அணுக்களுடன் போராடி அந்த உயிரியல் போரில் வென்றவர்கள் அவர்கள். முன்பெல்லாம் எவ்வாறு நடந்திருந்தாலும் பரவாயில்லை இனிவரும் காலங்களில் நாங்கள் ஒவ்வொருவரும் இந்த கோவிட் -19 நிலைமையில் சரியான கட்டுப்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்த மாவட்டம் பல விடயங்களில் முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆரம்பத்தில் மிக முன்னணியிலிருந்தவர்கள் நாம். ஆனால் இன்று பின்னணியில் இருக்கின்றோம். ஏனெனில் இந்த மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியைப் போடுவதற்குரிய பல பலவீனங்கள் எங்களுக்கிடையே காணப்படுகின்றது.

வளங்களைத் திரட்டுவதற்குரிய பிரச்சனை, பொது மக்களுக்கு இருக்கின்ற இளக்காரமான, அசமந்தப் போக்கு மற்றும் போலிப் பிரச்சாரங்கள் என்பனவே இந்த பூஸ்டர் தடுப்பூசி போடப்படுவதில் பின்னணியில் நிற்பதற்குக் காரணங்களாக இருக்கின்றன.

நாங்கள் விசேட வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அதனை முன்கொண்டு செல்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து தான் அதனை முன்கொண்டு செல்ல வேண்டும். இதற்கு அனைவரின் ஒத்துழைப்புகளும் தேவை. ஒன்றுகூடுகின்ற விடயங்களை நாங்கள் நிச்சமாகத் தவிர்க்க வேண்டும். தேவையான ஒன்றுகூடல்களை மாத்திரம் மேற்கொண்டு தேவையற்ற ஒன்றுகூடல்களைத் தவிர்த்துவிட வேண்டும்.

அவ்வாறு ஒன்றுகூடல்கள் தேவையானதாக இருந்தால் முகக்கவசம், இடைவெளி, கைச் சுகாதாரம் என்பவற்றை நிச்சயமாகப் பின்பற்ற வேண்டும். தற்போது 12 வயதிலிருந்து 15 வரையுள்ள மாணவர்களுக்கு ஒரு பைசர் ரக தடுப்பூசியும், 16 வயதிலிருந்து 19 வரையுள்ளவர்களுக்கு இரண்டு பைசர் ரக தடுப்பூசியும், 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், கர்ப்பிணி தாய்மாருக்கும் மூன்று தடுப்பூசிகளும் செலுத்தப்படுகின்றன.

இந்த தடுப்பூசி செயற்திட்டத்தை நாங்கள் பூரணமாக முடிக்க வேண்டும். அப்போதுதான் தற்போது வருகின்ற ஒமிக்ரோன் என்கின்ற தொற்றிலிருந்து நாங்கள் தப்பித்துக் கொள்ள முடியும்.

எந்தவொரு தொற்றும் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கும் வரும் ஆனால் அவர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்படப் போவதில்லை. தொண்டையுடன் அந்த தொற்று நிலை நின்றுவிடும்.

ஆனால் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டு அவர்கள் இறக்கின்ற நிலையும் உருவாகும். எனவே தடுப்பூசியை நாங்கள் நிச்சயமாக ஏற்றிக் கொள்ள வேண்டும்.

இந்த ஒமிக்ரோன் தொற்று மிக வேகமாகப் பரவி வருகின்ற தொற்று. தற்போதைய நிலையில், எமது மாவட்டத்தில் 1500 நோயாளிகள் இனங்காணப்பட்டாலும் எமது அனுமானத்தின் பிரகாரம் அது பத்து மடங்கிற்கு அதிகமாகவும் இருக்கலாம். ஏனெனில் இலைமறைகாயாக ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள் இருக்கின்றார்கள்.

அந்த விடயங்களைக் கட்டுப்படுத்துவதற்கு நாங்கள் முயற்சி செய்வதுடன், ஏனையவர்களையும் பல கட்டுப்பாடுகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும். தடுப்பூசிதான் தொற்றின் நிரந்தரத் தீர்வுக்கு ஒரே வழி என தெரிவித்துள்ளார்.