தந்தையிடம் மன்னிப்புக்கேட்டு உயிரிழந்த 19 வயது மகள் : செங்கலடியில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

0

பெற்றோரின் சம்மதமின்றி, காதலனின் அழைப்பையேற்று வீட்டை விட்டு வெளியேறிய மகள் சமையலரையில் தீ விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சோக சம்பவம் செங்கலடியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நேற்று மாலை (15.09.2020) இடம்பெற்றுள்ளது.

பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் போதே, மகள் ஒரு மாணவனை விரும்புவது தெரிந்ததும் பாடசாலைக் கல்வியை பெற்றோர் இடைநிறுத்தியுள்ளனர்.

ஒரு வருடமாக பாடசாலை செல்லாதிருந்த காதலியைத்தேடி தளவாயைச்சேர்ந்த காதலன், அந்த யுவதியின் வீட்டுக்கு 27-02-2020 அன்று சென்று,”என்னை விரும்பியது உண்மையென்றால், இப்பவே என்னோடு வா” என்று அழைக்க, பெற்றோரின் கதறல்களுக்கு மத்தியில் அன்றே காதலனோடு வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.

பதிவுத்திருமணம் செய்து கொண்டு தளவாயில் வசித்து வந்த இவர்கள், கடந்த ஒரு மாதமாக குமாரவேலியார் கிராமம், செங்கலடியில் வாடகைக்கு வீடொன்றைப் பெற்று வசித்து வந்திருக்கிறார்கள்.

இந்த யுவதியின் தந்தை சவூதி அரேபியாவில் தொழில் செய்து வருகிறார். சென்ற 11-09-2020 வெள்ளிக்கிழமை, சமையலரையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, தவறுதலாக இவர் மேல் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டதால், ஆடைகளும் ஈரமாகியுள்ளது.

அதனைப்பெரிது படுத்தாது வேலைகளைத் தொடர்ந்ததும் , ஆடைகளை மாற்றி வேறு ஆடை உடுத்திட்டு வா என யுவதியின் கணவர் சொன்ன போது, தேவையில்லை. ஈரம் காய்ந்து விட்டது.

அவசரமாக சமைத்து முடிப்போம் என தீப்பெட்டி கொண்டு அடுப்பை பற்ற வைக்க, முயற்சிக்கையில் திடீரென ஆடையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில்,

செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

தீக்காயங்ளுக்குள்ளான நிலையில் பெற்றோரைச் சந்திக்க வேண்டுமென்றும், அவர்களிடம் மன்னிப்புக்கேட்க வேண்டுமென்றும், தகவல் கிடைத்து, வைத்தியசாலைக்குச் சென்ற தாயிடம் மன்னிப்புக்கேட்டதோடு, சவூதியிலிருக்கும் தந்தையிடம் இணையத்தளம் மூலம் நேரடியாகத் தொடர்பு கொண்டு மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.