தனக்காக உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழியன் இன்றுவரை செய்துவரும் நெகிழ்ச்சியான செயல்!

0

யாழில் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவருடைய மெய்ப்பாதுகாவலர் ஹேமச்சந்திர உயிரிழந்து இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழியன் மாதாந்தம் அவர் வாக்களித்த பணத்தினை மனிதாபிமான ரீதியில் வழங்கி வருவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த மெய்ப்பாதுகாவலரின் மகள் மற்றும் மகனின் கல்வி நடவடிக்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நீதிபதி இளஞ்செழியன் தற்போது வரையில் மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில், அவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக மோட்டார் சைக்கிள் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான மாதாந்த தவனைப் பணம் நீதிபதியினால் அனுப்பி வைக்கப்படுகின்றது.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தந்தையை இழந்து வாழும் குழந்தைகளுக்கு ஆறுதலாகவும், தொடர்ந்து மெய்ப்பாதுகாவலர் ஹேமச்சந்திரவின் வீட்டிற்குச் சென்று பிள்ளைகளை பார்வையிட்டு வருவதுடன் பல உதவிகளையும் செய்து வரும் நீதிபதியின் செயல் எவருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. எனினும் தற்போது சிங்கள மக்களிடையே ஊடகங்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது.

2018ம் ஆண்டு நீதிபதியின் கல்லுாரி நண்பர்கள் 20 இலட்சம் ரூபாய் செலவில் ஹேமச்சந்திரவின் வீட்டை புணரமைத்துக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

மெய்ப்பாதுகாவலரின் இறப்பையும் கடந்து மனிதாபிமான ரீதியில் நீதிபதி இளஞ்செழியன் செய்து வரும் உதவிகள் தமிழ் மக்களுக்கு அப்பால் சிங்கள மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.