இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டு வரும் முகாம்களிலிருந்து 142 பேர் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் செயன்முறையைப் பூர்த்தி செய்து, வீடு திரும்பியுள்ளனர் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சத்தை அடுத்து, இராணுவ முகாம்கள் உள்ளிட்ட தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 4348 பேர், இதுவரை தனிமைப்படுத்தல் செயன்முறையைப் பூர்த்தி செய்து வீடு திரும்பியுள்ளனர் என்று இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், 1582 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்திக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்றைய தினமும் கொரோனா தொற்றுக்குள்ளானவர் அதிகரித்துள்ள கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியிலிருந்து 1010 பேரும், நேற்று முன்தினம் 242 பேரும் இராணுவத்தினரால் தன்மைப்படுத்திக் கண்காணிக்கும் 03 முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தலை பகுதிகளில் இருவர் கொவிட் தொற்று அடையாளங் காணப்பட்டனர்.
இவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.
பொரலஸ்கமுவ பகுதியில் தொற்றுக்குள்ளானவர் சிகிச்சைக்காக சென்றிருந்த, தனியார் மருத்துவமனையின் பணியாளர்களும் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோல் பிலியந்தலையில் அடையாளங் காணப்பட்ட தொற்றுக்குள்ளானவர் தொடர்பு கொண்டிருந்த குடும்பத்தார் மற்றும் உறவினர்களை நேற்று தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.