தமிழரின் இருப்பு, பாதுகாக்கப்பட வேண்டும் – இரா.சாணக்கியன்!

0

தமிழரின் இருப்பு, பாதுகாக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “மட்டக்களப்பு மாவட்டத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வாக்குகளைக் குறைக்க வேண்டுமானால், அது சாணக்கியனைத் தாக்கித்தான் செய்ய முடியும் என்ற நிலை வந்திருப்பது எனக்குப் பெருமையான விடயமாகும். தொடர்ந்து என்னை விமர்சிக்க வேண்டும் என்பது, எனது வேண்டுகோளாகும்.

நான், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற பிரச்சினைகள் என்பதை விட, வடக்கு, கிழக்கில் இருக்கின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எனது விருப்பு வாக்குக்கு அப்பால், செயற்பட்டு வருகின்றேன். தமிழரின் இருப்பு, பாதுகாக்கப்பட வேண்டும்.

வடக்கு, கிழக்கில் எமது ஆசனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில், இன்று அனைத்து விடயங்களிலும் நான் கவனம் செலுத்தி வருவது, என்மீதான விமர்சனங்களுக்குக் காரணமாக இருக்கின்றது.

இந்தத் தேர்தல் முடியும்வரை, உங்களுடைய விருப்பு வாக்கைப்பற்றிச் சிந்தியுங்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வாக்கு வங்கியை அதிகரிப்பதற்கும் ஆசனங்களை அதிகரிப்பதற்கும் நீங்கள் செயற்படுங்கள் என, எனது ஆதரவாளர்கள் என்னிடம் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்கள்.

எமது நாடாளுமன்றப்  பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். வடக்கு, கிழக்கில் 20 ஆசனங்களைப் பெற்றால்தான், எதிர்காலத் திட்டங்களைச் சரியான முறையில் கையாள முடியும்.

வெறும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதைவிட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இலக்கை, நாங்கள் அடைய வேண்டுமானால் எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை, நாங்கள் அதிகரிக்க வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.