கிழக்கு மாகாண தொல்லியல் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணி நியமனம் தொடர்பாக திருகோணமலை பொது அமைப்புக்களின் ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ஜனாதிபதி செயலணியை முற்றாக நிராகரிக்கின்ற அதேவேளை, தமிழரின் தொன்மையையும் இருப்பையும் கேள்விக்குள்ளாகும் அரசியல் வேலைத் திட்டங்களை வன்மையாகக் கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஆனி 2ஆம் திகதி, 2020ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானியூடாக வெளியிடப்பட்ட அறிவிப்பின் பிரகாரம், கிழக்கு மாகாண தொல்லியல் மரபுரிமைகளைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு கொடுப்பதற்கென பதினொரு அங்கத்தவர்களைக் கொண்ட செயலணியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (தலைவர்), கிழக்கு சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர், அரிசிமலை பௌத்த நாயக்க தேரர் உட்பட பௌத்த பிக்குகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
முன்மொழியப்பட்ட பெயர்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது அரிசிமலை பௌத்த நாயக்க தேரரே. கிழக்கு மாகாணத்தை குறிப்பாக திருகோணமலையை சிங்கள பௌத்த மயமாக்கியதில் அவரின் வகிபங்கு இன்றியமையாதது.
இப்படியான ஒருவரை நியமித்தது இச்செயலணியின் உள்ளெண்ணத்தை வெளிக்கொணருகின்றது. இவர் ஏற்கனவே 4500 ஏக்கர் நிலத்தை அதே நிகழ்ச்சி நிரலுக்காக கோரியிருந்தார் என்பதனையும் அவற்றில் 1200 ஏக்கர் நிலத்திற்கு அனுமதி வழங்கும் செயன்முறை கொழும்பில் இறுதிக் கட்டப் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகின்றது என்பதனையும் நாம் அறிவோம்.
முற்றுமுழுதாக சிங்கள இனத்தவர்களைக் கொண்டமைக்கப்பட்ட செயலணியின் நியமனம் குறிப்பாக கொவிட்-19 நெருக்கடி காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட்டதன் உள்நோக்கம் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டிய அவசியம் எழுகின்றது.
மகாவம்ச மனநிலை கொண்ட சிங்கள அரசுகளின் ஒற்றை அரசியல் நிகழ்ச்சித் திட்டமாக, சிங்கள-பௌத்த ஒற்றைக் கலாசாரத்தைக் கொண்ட தேசக் கட்டுமானப் பணியில் முதலிடப்படுகிறது. இவ் ஒற்றைக் கலாசாரக் கட்டமைப்பின் உச்சக்கட்டமாக, அரச இயந்திரக் கட்டமைப்பு வலுவை மையப்படுத்தி, இராணுவ மயப்படுத்தி, சிறிலங்கா, சிங்கள-பௌத்த தேசமே என மீளவும் தமிழ் மக்களுக்கும் ஏனைய சிறுபான்மை இனக் குழுக்களுக்கும் நினைவூட்டி வருகின்றது.
இந்நிலையில், இச்செயலணியின் 4ஆவது பணியாக சிறிலங்காவின் தனித்துவத்தைப் பேணிப் பிரசாரம் செய்தல். ‘சிறிலங்கன்’ அடையாளக் கட்டமைப்பு சிங்கள-பௌத்தமாய் இருத்தலை மையப்படுத்தியது.
சிங்கள-பௌத்தமாய் இருத்தல் சிறிலங்காவின் பல்லினத் தன்மையை ஏற்றுக்கொள்வதில்லை, ஒற்றைக் கலாசாரத்தை மட்டுமே ஊக்குவிக்கின்றது. ஒற்றைக் கலாசார தேசியவாதக் கட்டமைப்பு தமிழின இருப்பை இலங்கையில் சிக்கலுக்கு உட்படுத்துகின்றது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளின் ஆரம்பப் புள்ளியாக இணைந்த வடக்கு கிழக்கும் தமிழர்களின் பூர்வீகத் தொன்மையும் மிக முக்கிய அலகுகளாகும். ஈழத் தமிழர்களின் பாரம்பரிய இருப்பைச் சிதைக்கும் அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தில் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அவற்றின் முதற்கட்டமாக வடக்கு கிழக்கு பிரிப்பு அரங்கேற்றப்பட்டது. பிரிப்புக்கு முன்னரேயே கிழக்கில் தமிழர்களின் செறிவைக் குறைத்து பல்லின பரம்பலை முன்னெடுக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு கணிசமான முன்னேற்றத்தை காணப்பட்டுள்ளது. இதன் பின்னணியில்தான் தமிழ் பாரம்பரிய நிலங்களான அம்பாறை மாவட்டம், திருகோணமலை மாவட்டம் போன்றன தமிழர்களின் குடிசனப் பரம்பல் குறைந்த மாவட்டங்களாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
தொல்லியல் திணைக்களம் தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரிப்பதில் தீவிரமாக செயற்பட்டுவருவதை மறுப்பதற்கில்லை. இச்செயலணிக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு நில அபகரிப்பின் தீவிரத்தன்மை சட்ட வலுவாக்கம் பெறுகின்றது. தொல்லியல் திணைக்களம் கிழக்கு மாகாணத்தில் ஈழத் தமிழர் பூர்வீகத்தின் இருப்பை திரிபுபடுத்தி, சிக்கலுக்கு உட்படுத்தி வரலாற்றியலை தனக்கு சாதகமாக வடிவமைத்துக் கொண்டு வருகின்றது.
இம்முயற்சியின் ஆகப் பிந்தைய வடிவம்தான் இச்செயலணி நியமனமாகும். ஈழத் தமிழர்களின் தொன்மையை சிக்கலுக்குட்படுத்தி ஏற்கனவே சிங்கள-பௌத்த தேசியவாத புழக்கத்தில் உள்ள ‘தமிழர்கள் வந்தேறுகுடிகள்’ என்ற வரலாற்றுச் சொல்லாடலை வலுப்படுத்துவததோடு ஈழத் தமிழர்களின் தொன்மையின் இருப்பை கேள்விக்கும் உட்படுத்துகின்றது.
இவ்வாறு ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை சிக்கலுக்குட்படுத்துவதன் மூலம் ஈழத் தமிழ்களின் கூட்டு அரசியல் கோரிக்கைகளும் ஈழத் தமிழரின் நிலப்பரப்பும், ஈழத்து தமிழர் இருப்பின் தொன்மையும் சிதைக்கப்படும் போது தமிழர்கள் இந்த தேசத்திற்கு உரியவர்கள் அல்ல என்ற பிம்பத்தை கட்டமைக்க முயல்கின்றது.
ஈழத் தமிழர்களின் நியாயமான அரசியல் கோரிக்கையை நீக்கி தமிழினத்தை ஏனைய சிறுபான்மை இனங்களைப் போல் கட்டமைக்க முயலுகின்றது. சிறிலங்கா கட்டமைக்கும் சிங்கள-பௌத்த ஒற்றைக் கலாசாரம் முஸ்லிம் மக்களுக்கான சனநாயக அரசியல் வெளியை மறுக்கின்றது. இவ்வாறு ஜனநாயக வெளியை மூடுதல் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுத்தலாகும்.
இவ்வாறான ஜனநாயக அரசியல் தளத்தில் முஸ்லிம் மக்களின் இருப்பு கேள்விக்குட்படுத்தப்படுகின்றது. தமிழர் அரசியல் கோரிக்கை முஸ்லிம் மக்கள் தவிர்த்த தாயகக் கோட்பாட்டை முன்வைத்ததில்லை. முஸ்லிம் மக்களை உள்வாங்கிய வடக்கு-கிழக்கை தமிழர் தாயக நிலப்பரப்பாகவே தமிழ் தேசியம் முன்வைக்கின்றது.
தமிழ்-முஸ்லிம் இணைப்பு மூலம்தான் இரு இனங்களும் தங்கள் உரிமைக் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்பது எமது அசைக்க முடியாத நம்பிக்கை. இரு இனங்களுக்கான நம்பிக்கையை கட்டியெழுப்புவதன் மூலம்தான் எங்களுடைய இருப்பை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
இந்நேரத்தில், பரஸ்பர உறவைக் கட்டியெழுப்புவதோடு இருப்புரிமைக்காக சேர்ந்து குரல்கொடுப்போம். பெரும்பான்மை ஜனநாயகத்தில், பெரும்பான்மையினரின் தயவில் சிறுபான்மை இனக் குழுமங்கள் வாழ முடியும் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கி பெரும்பான்மை சனநாயகத்தின் அடிநாதமான ஒற்றையாட்சி அலகை பலப்படுத்துகின்றது.
மேற்கூறப்பட்டவைகள் பலப்படுத்தப்படும் போது சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் கோரிக்கைகள் வலுப்படுத்தப்படுகின்றன என்பது எமக்குத் தெரியாததல்ல.
கிழக்கில் தமிழர்களின் கூட்டு இருப்பையும், இருப்பின் பூர்வீகத்தையும் சிதைத்தல் ஒட்டுமொத்த ஈழத் தமிழரின் இன அடையாளத்தை இல்லாமற் செய்தலேயாகும். அவர்களின் முயற்சியில் அணுவும் பிசகாது அரசியல் நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கின்றன. இம்முன்னெடுப்புகளுக்கு எதிர்ப்புகள் எழாத வண்ணம் தமிழர்களைப் பிரித்து ஆளுவதன்மூலம் ஒற்றுமையை பலவீனமாக்கி வருகின்றது.
எனவே, எமக்குள் இருக்கும் உட்பூசல்களைக் கடந்து தமிழர்களின் அரசியல் கூட்டுக் கோரிக்கைகளின் நியாயத்தன்மையையும், அற ஒழுக்கத்தையும் தமிழர்களுக்கிடையேயுள்ள அற வலுவையும் முன்னிலைப்படுத்தி அடக்குமுறைக்கெதிராக குரலெழுப்ப வேண்டிய சூழலை நாம் எதிர்கொள்கிறோம்.
எனவே, இச்செயலணியை நாம் முற்றாக நிராகரிக்கின்ற அதேவேளை, எமது தொன்மையையும் இருப்பையும் கேள்விக்குள்ளாகும் அரசியல் வேலைத் திட்டங்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.