தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நியூஸ்லைன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்திருந்தார்.
கடந்த நல்லாட்சிக் காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்த பல நல்ல விடயங்களுக்கு விளம்பரம் இல்லாமல் போனதாக அவர் குறிப்பிட்டார்.
தமிழ், முஸ்லிம்களுக்கு இடையில் உறவை வளர்க்க சந்தர்ப்பம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்ட சாணக்கியன், சமூகத்தின் ஒத்துழைப்புடன் அரசியல் தீர்வைக் கூட பெற்றுக்கொள்ள முடியும் என கூறினார்.
இதேவேளை, தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும் புதிய அரசியலமைப்பு தொடர்பிலும் தமது முன்மொழிவை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் வழங்கத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தமிழர்களின் கோரிக்கைகளை சிங்கள அரசியல்வாதிகளுக்கன்றி, சிங்கள மக்களுக்கே முதலில் புரியவைக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நாட்டை பிரிக்கச் சொல்லி நாங்கள் கேட்கவில்லை. இந்த நாட்டில் கௌரவமாக வாழ முடியாத நிலையில் இருப்பதாக முஸ்லிம் மக்கள் கூறுகிறார்கள். சிங்கள மக்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருந்தால், நிலைமை மாறியிருக்கும்
என சாணக்கியன் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, அவரின் பாராளுமன்ற உரையில் ஜனாஸா விவகாரம் தொடர்பில் முஸ்லிம் தலைவர்களை சாடியிருந்தார்.
அவ்வுரையின் பின்னர் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தன்னிடம் கவலை வௌியிட்டதாகக் கூறினார்.
ஒரு சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவலையுடன் பேசியிருந்தார்கள். நான் அப்படி பேசியிருக்க கூடாது என்று சொன்னார்கள்
என சாணக்கியன் தெரிவித்தார்.
எனினும், அவ்விடயம் பாராளுமன்றத்தில் நட்பு ரீதியில் பகிரப்பட்டமையால், கவலை தெரிவித்தவர்களின் பெயர்களை வௌியிட சாணக்கியன் மறுத்துவிட்டார்.
2013 ஆம் ஆண்டு மக்களுக்கு அபிவிருத்தி தேவை என்பதற்காக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இணைந்ததாகக் கூறிய அவர், இதன்போது தமிழ் மக்களுக்கு சாதகமான விடயங்கள் இடம்பெறவில்லை என சுட்டிக்காட்டினார்.
”22 வயதில் நான் எடுத்த அந்த முடிவு தவறானது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், அரசாங்கத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டால் இணைந்துகொள்வீர்களா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு,
”சிங்கள பேரினவாத கட்சி அரசாங்கத்தில் அமைச்சராக இருக்க மாட்டேன்” என உறுதியாகக் கூறினார்.