அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்ததன் ஊடாக, தமிழர்களுக்கான தீர்வுத் திட்டங்களை இலகுவாக வலியுறுத்த முடியும் என்றும் இதிலிருந்து அரசாங்கத்தால் நழுவ முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “கடந்த காலத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லையென தமிழர்களை அரசாங்கங்கள் ஏமாற்றி வந்தன. இதனையே சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை சாட்டாக கூறிவந்தது. ஆனால் இனி அவ்வாறு ஏமாற்ற முடியாது. இலகுவாக புதிய அரசியலமைப்பு உருவாக்கங்களை செய்ய முடியும்.
இதேபோன்று தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான சர்வதேசத்தின் அழுத்தங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.
2009ஆம் ஆண்டு சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டிய காலம் தற்போது வந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றும் மூன்றாவது சக்தியாகவே இருக்கின்றது.
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களுக்கு சர்வதேச சமூகத்துடன் இணைந்து அழுத்தங்களை வழங்கி அதற்கான தீர்வினை இலங்கை வழங்கவேண்டும்.
கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் வேறுவேறு திசையில் இருந்தனர். ஆனால் இன்று சகோதரர்கள் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் இருக்கின்றனர். தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதற்கு இதனைவிட நல்லதொரு சந்தர்ப்பம் வேறு அமையாது” என அவர் மேலும் தெரிவித்தார்.