தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் கடன்வாங்கப்பட்டவர்கள் அல்லர் – இரா.சாணக்கியன்!

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் கடன்வாங்கப்பட்டவர்கள் அல்லர் என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பட்டிப்பளை – மகிழடித்தீவு மைதானத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது என கேட்கின்றார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பில் எந்தவொரு வேட்பாளரும் கடன்வாங்கப்பட்டவர்கள் அல்ல.

எனது பெயரைப் பற்றி ஒரு கட்சியின் செயலாளர் விமர்சித்து கொண்டு இருக்கின்றார். நான் எனது பெயரின் ஒரு பகுதியினை கடன்வாங்கியுள்ளதாக விமர்சிக்கின்றார்.

நீங்கள் எனது பெயரை விமர்சிப்பதனை விட்டு விட்டு, வேட்பாளராக நீங்கள் தெரிவு செய்திருக்கும் சில நபர்கள் கூட்டமைப்பினால் நிராகரிக்கப்பட்டவர்கள். அவர்களைத்தான் நீங்கள் இம்முறை தெரிவு செய்துள்ளீர்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்க கூடாது என்பதற்காக சிலர் கூறும் காரணங்கள் வேடிக்கையாகவே உள்ளன.

பட்டிப்பளை வளங்கள் நிறைந்த ஒரு பகுதியாகும். எனினும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள பகுதியாக இந்த பகுதி காணப்படுகின்றது. இங்கு குறித்த வளங்களை பயன்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு உரிமையுடன் கூடிய அபிவிருத்தி பணிகளை நிச்சயம் செய்யும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நான்காவது ஆசனம் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே இம்முறை மட்டக்களப்பில் அதிகளவான வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான வேட்பாளர்கள் தங்களது சுயலாபத்திற்காகவே களமிறங்கியுள்ளனர் என்பதே உண்மை“ எனக் குறிப்பிட்டுள்ளார்.