தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பின்னடைவுகளை ஆராய சுயாதீனக் குழு

0

9 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் தொடர்பாக ஆராய்வதற்காக சுயாதீனக் குழுவொன்றை நியமிப்படவுள்ளது.

ஆத்துடன் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தினை எதிர்வரும் 29 ஆம் திகதி வவுனியாவில் நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு கூட்டம் நேற்று சனிக்கிழமை திருகோணமலையில் உள்ள குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே மேற்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இக்கூட்டம் தொடர்பாக இலங்கை தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்,

தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு கூட்டம் சுமூகமாக இடம்பெற்றது. தேர்தலில் ஏற்பட்டள்ள வாக்குச் சரிவு உள்ளிட்ட பின்னடைவுகளை நாம் கவனத்தில் கொண்டு கலந்துரையாடியிருந்தோம்.

இந்த விடயத்தில் எமக்குள் கலந்துரையாடுவதை காட்டிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வெளியே சுயதீன ஆய்வுக்குழுவொன்றை நியமித்து தேர்தல் பின்னடைவுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை பெறுவதற்கு பரிந்துரைக்கப்பட்டது. அதனை அரசியல் குழு ஏற்றுக்கொண்டதோடு அதற்குரிய நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை தேசியப்பட்டியல் நியமனத்திற்கான தெரிவு அதாவது பிரதிநிதித்துவத்தினை இழந்த அம்பாறை மாவட்த்திற்கு வழங்கப்பட்டமையானது சரியென்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் அந்த ஆசனம் வழங்கப்பட்ட முறைமை தொடர்பில் சில கருத்தியல் ரீதியான வேறுபாடு காணப்படுகின்றது.

ஆகவே அந்த விடயம் சம்பந்தமாக மேலும் விரிவாக மத்திய குழுவில் ஆராய்வதாக தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது என்றார்.