தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினருக்கு இயன்ற உதவிகளை வழங்கவுள்ளேன்- சாணக்கியன்

0

சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை வழங்கவுள்ளதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வீடுகளுக்குச் சென்று இரா.சாணக்கியன், அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அந்தவகையில், மட்டக்களப்பு தேற்றாத்தீவில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவரும் தற்போது அரசியல் கைதியாக இருப்பவருமான ராம் என்பவரின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரின் தேவைகள் குறித்து கலந்துரையாடினார்.

அதேபோன்று, களுவன்கேணி, சந்திவெளி, கொம்மாதுறை ஆகிய பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள அரசியல் கைதிகளின் குடும்பத்தினரின் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினார்.

இதன்போது, தான் தேர்தலில் வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தாலும் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை வழங்குவதாக உறுதியளித்த இரா.சாணக்கியன், அவர்களுக்கு சிறு உதவிகளையும் வழங்கிவைத்தார்.