தமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியல் பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – க.இன்பராசா

0

தமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியல் பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இதனைப் பலப்படுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பயணித்தால் மாத்திரமே எமது மக்களுக்குரிய அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கலாம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த மாத இரண்டாம் வாரத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவினை சந்தித்து எமது புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து கலந்துரையாடலை மேற்கொண்டு, ஒரு ஒப்பந்தப் படிவமொன்றையும் சமர்ப்பித்தோம்.

தமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியல் பலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இதனைப் பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பயணித்தால் மாத்திரமே எமது மக்களுக்குரிய அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கலாம் என்ற தூரநோக்கத்துடனுமே இச்சந்திப்பினை மேற்கொண்டோம்.

யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் புனர்வாழ்வளிக்கப்பட்டு பின்னர் 2016ஆம் ஆண்டு எமது கட்சியை ஆரம்பித்து, அதனைப் பதிவதற்குத் தேர்தல் ஆணையகத்தில் விண்ணப்பத்தினை மேற்கொண்டுள்ளதுடன், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அரசியல் ரீதியான பயணத்திலே ஈடுபட்டு வருகின்றோம். கடந்த பிரதேச சபைத் தேர்தலிலும் போட்டியிட்டிருந்தோம்.

வெற்றியோ தோல்வியோ எமது இனத்திற்காக யுத்தம் செய்தவர்கள் நாங்கள். எனவே நாம் அரசியலில் இருந்து ஒதுங்காது அனைத்து தேர்தல்களிலும் களமிறங்க வேண்டும் என்கின்ற விடயம் பலராலும் வலியுறுத்தப்பட்டது.

ஆயுதப் பலத்துடன் சேர்ந்து அரசியல் பலமும் இருக்க வேண்டும் என்ற தூரநோக்கத்துடன் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

தற்போது அதிலிருந்து சிலரும், சில கட்சிகளும் பிரிந்து தனித்தனியாகவும், கூட்டாகவும் செயற்பட்டு வருகின்றார்கள். அவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் பிரிந்து செயற்படவில்லை. மாறாக தமிழ் மக்களின் வாக்குகளுக்காகவும்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராகவுமே செயற்படுகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே பலதரப்பட்ட கட்சிகள் இன்று உருவெடுத்து நிற்கின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்கள் விடும் பிழைகளை உள்ளிருந்து சுட்டிக்காட்டி திருத்த வேண்டும் அல்லது அவர்களை விலக்கி விட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும்.

அவ்வாறு செய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலுப்பெற வைத்து நடத்த வேண்டும் என்றில்லாமல் ஆளுக்காள் பிரிந்து ஒவ்வொரு கட்சியை உருவாக்கிக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கினைப் பிரிப்பதற்காக முற்படுகின்றார்கள்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.