தமிழ் மக்களுடைய பிரச்சனையை ஆட்சியாளர்களால் கடந்து போக முடியாது – சுமந்திரன்!

0

தமிழ் மக்களுடைய பிரச்சனையை ஆட்சியாளர்களால் கடந்து போக முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எம் மக்கள் தொடர்ச்சியாக ஒரே அரசியல் நிலைப்பாட்டுக்கு வாக்களித்துக் கொண்டிருப்பதனாலேயே ஆட்சியாளர்களால் அதனைக் கடந்து போக முடியவில்லை என்றும் கூறினார்.

வடமராட்சி – திக்கத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2010ஆம் ஆண்டிலும் தங்களது ஆணை கிடைத்ததாக சொன்னார்கள். பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை தங்களுக்குள் வகுத்துக் கொண்டுத்தான் 18வது திருத்தத்தை நிறைவேற்றினார்கள்.

ஆனால் எங்களுடைய பிரச்சனையை கடந்து போக முடியவில்லை. எங்களுடைய பிரச்சனையை அவர்கள் கடந்து போக முடியாது.

ஏனென்றால் திடகாத்திரமாக தீர்மானமாக எங்களுடைய மக்கள் தொடர்ச்சியாக ஒரே அரசியல் நிலைப்பாட்டிற்கே வாக்களித்து கொண்டிருக்கின்றோம். அந்த ஜனநாயக தீர்ப்புகளை தாண்டி அரசாங்கம் செல்ல முடியாது“ எனவும் அவர் குறிப்பிட்டார்.